‘லிங்கா’ நஷ்ட ஈடு விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் சிங்காரவேலன், ரூபன், கிஷோர் குமார் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் சில புதிய குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
ரஜினியின் தூதுவராக சமாதானப் பேச்சு பேசு வந்த பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் மீதும் சில குற்றச்சாட்டுகளைக் கூறினர். அதற்கு பதிலளிக்கும் விதமாக சுப்பிரமணியன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் வினியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி ஆகியோருடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ‘லிங்கா’ விவகாரத்தில் சமாதானப் பேச்சு ஆரம்பமான நாளிலிருந்து இன்று வரை நடந்து வந்த விவரங்களைத் தெரிவித்தார்.
“30 ஆண்டுகளுக்கும் மேலாக வினியோகத் துறையில் இருக்கும் என்னை ‘லிங்கா’ நஷ்ட ஈடு விவகாரத்தில் சில வினியோகஸ்தர்கள் பிரச்சனை செய்வதைப் பற்றி என்னை அழைத்து ரஜினிகாந்த் பேசினார். அவர்களிடம் பேசி நஷ்ட ஈடு விவரம் பற்றி கேளுங்கள் என்று ரஜினிகாந்த் சொன்னார்.
அதன் பின் வினியோகஸ்தர்களைச் சந்தித்து நஷ்ட ஈட்டுத் தொகையைக் கேட்டு வாங்கினேன். இந்த விவகாரத்தில் நான் வெறும் போஸ்ட் மேனாகத்தான் இருக்கிறேன். ரஜினிகாந்த் என்ன செய்வார், நஷ்ட ஈட்டுத் தொகை தருவாரா என்று எனக்குத் தெரியாது என்று அவர்களிடம் சொன்னேன். அதன் பின் ரஜினியைச் சந்தித்து நஷ்டக் கணக்கைப் பற்றிச் சொன்னேன். இவ்வளவு நஷ்டம் என்று சொல்கிறார்களே, உண்மையா என்று கேட்டார். என்னுடைய அனுபவத்தில் இது சரியாக இருக்கும் என்று சொன்னேன். உடனே ரஜினிகாந்த் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷைத் தொடர்பு கொண்டு பேசச் சொன்னார்.
அவரிடமும் , திரைப்படக் கூட்டமைப்பிலும் பேசி ஒரு வழியாக தயாரிப்பாளர் ராக்லைன் தரப்பிலிருந்து 12.5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தருவாக முடிவானது. அதற்கு சிங்காரவேலன் உள்ளிட்ட அனைவரும் சம்மதித்தனர். சிங்காரவேலனுக்கு 35 லட்ச ரூபாய் நஷ்டத் தொகையும் கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் நன்றி தெரிவித்து விளம்பரங்கள் கூட கொடுத்தார்.
இதுவரை தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சுமார் 6 கோடி ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளது. அதை சிலருக்குப் பகிர்ந்து கொடுத்து விட்டோம். மீதமுள்ள தொகை இன்னும் சில நாட்களில் பகிர்ந்து கொடுக்கப்பட்டுவிடும். வட ஆற்காடு, தென்னாற்காடு வினியோகஸ்தர் இதுவரை கணக்குக் கொடுக்கவில்லை. படத்தை மொத்தமாக வாங்கி வெளியிட்ட வேந்தர் மூவீசுக்கும் நஷ்டத்தைக் கொடுப்போம் என்று சொன்னோம். அதற்கு சிங்காரவேலன் தரப்பினர் சம்மதிக்கவில்லை.
அதோடு, ரஜினிகாந்த் ‘லிங்கா’ படத்தை வாங்கி நஷ்டமடைந்த வினியோகஸ்தர்களுக்கு படம் நடித்துத் தருகிறேன் என்று சொல்லவேயில்லை. ‘பாபா’ படத்தில் நஷ்டம் ஏற்பட்ட போது கூட வினியோகஸ்தர்களுக்குப் படம் நடித்துக் கொடுத்து நஷ்டத்தைச் சரிக்கட்டலாம் என்று பேச்சு வந்த போது அடுத்து நான் படம் நடிப்பேனா என்று தெரியாது, இந்தப் படத்தின் நஷ்டத்தை இதோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அதே போல ‘லிங்கா’ நஷ்டம் இதோடு முடிந்துவிடும்.
மனிதாபிமான அடிப்படையில் ரஜினிகாந்த் நஷ்ட ஈடு கொடுப்பதை தேவையில்லாமல் மேலும் மேலும் பிரச்சனையாக்குகிறார்கள்,” என திருப்பூர் சுப்பிரமணியம் அவருடைய விளக்கத்தை அளித்தார்.
இந்த சூழ்நிலையில் நாளை மீண்டும் ‘லிங்கா’ பட வினியோகஸ்தர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.