விக்ராந்த் நாயகனாக நடிக்க அவரது அண்ணன் புதுமுக இயக்குநர் சஞ்சீவ் இயக்கியுள்ள படம் ‘தாக்க தாக்க’. ஸ்டுடியோ வெர்சடைல் புரொடக்ஷன் மற்றும் யுனிகார்ன் ப்ரேம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தைக் கலைப்புலி இண்டர்நேஷனல் உலகெங்கும் வெளியிடுகிறது.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா பிரசாத் லேப் திரையரங்கில் நடை பெற்றது. இயக்குநர் செல்வராகவன் பாடல்களை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது
” நேரமே கிடைக்காத என் சூழலிலும் ஒரு நாள் இரவில் ‘தாக்க தாக்க’ படத்தைப் பார்த்தேன். இதை ஒரு கமர்ஷியல் கவிதையாக எடுத்து இருக்கிறார்கள். இயக்குநருக்கு நல்ல இயக்குநராகும் எல்லாத் தகுதிகளும் உள்ளன. அதற்கு கட்டியம் கூறுகிற மாதிரி இப்படம் இருக்கும். எதிர் காலத்தில் இவர் எங்கள் நிறுவனத்தில் படம் இயக்குவார்.
விக்ராந்த்திடம் வைரம் பாய்ந்த திறமை இருக்கிறது, அது அவரது முகத்தில் தெரிகிறது. அவரிடம் உள்ள தீட்சண்யம் மூலம் திறமை வெளிப்படும். அவருக்கு ஒரு நல்ல வருங்காலம் வரும். விக்ராந்தின் நண்பர்கள் விஷால், ஆர்யா, விஷ்ணு மூவரும் இந்தப் படத்தில் நடித்து உதவியிருப்பது இளம் நடிகர்களின் நட்புக்கு அடையாளமாக இருக்கிறது. இது எதிர்கால சினிமாவை செழிக்க வழிவகுக்கும். அதற்கு இது ஓர் அடையாளம் என்று கூறுவேன்,” என்றார்.
இயக்குநர் செல்வராகவன் பேசும் போது,“கலைப்புலி தாணு அவர்கள் வெளியிடுகிறார் என்கிற போதே இது ஒரு பிராமிஸிங் படம், நம்பிக்கைக்குரிய படம் என்று தோன்றுகிறது, வாழ்த்துகள்,” என்றார்.
இவ்விழாவில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கதிரேசன், பி.எல்.தேனப்பன், நடிகர்கள் அதர்வா, விக்ராந்த், அருள்தாஸ், இசையமைப்பாளர் ‘டிரம்ஸ்’ சிவமணி, தயாரிப்பாளர் தாரா அருள்ராஜ் ஆகியோரும் பேசினார்கள். இறுதியாக இயக்குநர் சஞ்சீவ் அனைவருக்கும் நன்றி கூறினார்.