எதையும் அரசியலாக்க வேண்டாம் – விஷால் வேண்டுகோள்

வேந்தர் மூவீஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் விஷால், காஜல் அகர்வால், சூரி மற்றும் பலர் நடிக்கும் ‘பாயும் புலி’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.

திரையயுலக் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்த இந்த விழாவில் விஷால் பேசும் போது அவர் எதைப் பேசினாலும் அதை அரசியலாக்கி திசை திருப்பி விடுகிறார்கள் என்று தெரிவித்தார்.

“இங்கே நான் ‘பாயும் புலி’ படத்தைப் பற்றி விரிவாகப் பேசப் போவதில்லை. இங்கே வருகிற விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுக்கவில்லை. அதற்கு ஆகிற செலவுத்தொகையை இரண்டு ஏழை மாணவிகளுக்கு கல்விக்கான உதவியாகக் கொடுக்கலாம் என்றேன், அதை தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டார், அதன்படி வழங்கப் பட்டுள்ளது. பூங்கொத்து வாடிவிடும். கல்விக்கு உதவுவது, இரண்டு பேர் வாழ்க்கைக்கு வழிகாட்டும். உடனே நான் பூங்கொத்து தயாரிப்பவர்களுக்கு எதிரி போல பேச ஆரம்பிக்க வேண்டாம். ஏனென்றால் நான் எது பேசினாலும் அரசியலாக்கி திசை திருப்பி விடுகிறார்கள்.

நான் வாயில்லாத ஜீவன்களுக்கு குரல் கொடுத்தேன். தெரு நாய்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன், அதை அரசியலாக்கி விட்டார்கள். ‘பாய்க்காட் கேரளா’ வரை பேச ஆரம்பித்து விட்டார்கள், அரசியலாக்கி விட்டார்கள். நான் கேரளாவுக்கு எதிரியல்ல, எதையும் அரசியலாக்கிவிட வேண்டாம். அடிமாடுகள் துன்புறுத்தப்படுவதற்கும் அப்படித்தான் குரல் கொடுத்தேன், விமர்சிக்கப் பட்டேன். வாயில்லாத ஜீவன்களுக்கு குரல் கொடுப்பது தவறா?

இங்கே மேடையில் பல பெரிய சாதனையாளர்கள், பெரிய மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்கள். என் முதல்படம் ‘செல்லமே’ வந்த போது என்னை முதன் முதலில் வாழ்த்தியவர் வைரமுத்து சார்தான். அவரது வாழ்த்து நம்பிக்கை ஊட்டியது. அதை என்றும் மறக்க மாட்டேன். எனக்கு சொத்தாக இருப்பது நண்பர்கள்தான். வேறு சொத்து எனக்கு இல்லை அவர்கள் இல்லாமல் நானில்லை.

சினிமா என் தொழில் சினிமா என் தாய். அதற்கு பாதிப்பு வரும் போது நிச்சயம் எனக்குக் கோபம் வரும். அப்படித்தான் திருட்டு விசிடிக்கு எதிராகப் போராடினேன். இதில் அரசியல் நோக்கமும் இல்லை, ஆர்வமும் இல்லை, விளம்பர நோக்கமும் இல்லை. என்னைப் போல எல்லாரும் நினைத்தால் சினிமா இன்னும் நன்றாக இருக்கும். ‘பாயும்புலி ‘படக் குழுவினருக்கும் விழாவுக்கு வந்த அனைவருக்கும் நன்றி,” என்றார் விஷால்.

Read Previous

Vijay’s words of wisdom at Puli audio launch

Read Next

சுசீந்திரனின் சூத்திரம் கண்டுபிடித்த வைரமுத்து