ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நோட்டா.’
‘அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம்’ புகழ் விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மெஹ்ரீன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சத்யராஜ். நாசர், எம்.எஸ்.பாஸ்கர், சஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர்.
‘அரிமாநம்பி, இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், சஞ்சனா, யாஷிகா ஆனந்த், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் ஆனந்த் சங்கர் பேசும்போது,
“இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் தயாரானவுடன் நாயகன் யார் என்கிற கேள்வி எழுந்தது. காரணம் இதில் ஹீரோவைத் தவிர மற்றவர்களுக்கும் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு இருந்தது. அப்போதுதான் தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி’ என கலக்கலான வெரைட்டியான படங்களின் மூலம் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விஜய் தேவரகொண்டா உருவாகிக்கொண்டு இருந்தார்.
தமிழ் ரசிகர்களும் சப் டைட்டிலுடன் அவரது படங்களை பார்த்து ரசிக்க ஆரம்பித்தனர். ஏன் இவரையே தமிழ் பேச வைக்கக் கூடாது என முடிவு செய்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் சொன்னேன். அவரும் எந்த மறுப்பும் சொல்லாமல் பச்சைக் கொடி காட்டவே விஜய் தேவரகொண்டாவை சந்தித்து கதை சொன்னேன்.
முதலில் அரைமணி நேரம் கதை சுருக்கத்தை மட்டும் சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் அன்று மாலையே என்னை அழைத்து முழுக்கதையும் சொல்லுங்கள் என கூறியபோதே இந்தப் படத்தின் கதாநாயகன் இருக்கையில் அவர் அமர்ந்துவிட்டார். மொழி தெரியாத ஹீரோ என்பதால் வசனங்களை எதுவும் அவர் மாற்ற சொல்லாமல் நடித்தது எனக்கு வசதியாக இருந்தது. படத்தில் அவரது தமிழ் உச்சரிப்பு எந்தவித மாறுபாடும் கண்டுபிடிக்க முடியாதவாறு அவ்வளவு நேச்சுரலாக இருக்கிறது.
அதேபோல சத்யராஜ் சாரும் முதலில் தயங்கினார். ஆனால் கதை கேட்டதும் டபுள் ஒகே சொல்லிவிட்டார். ‘அருவி’ படம் பார்த்துவிட்டு அதன் ட்ரெய்லரை பார்த்ததுமே எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா தான் இந்தப்படத்திற்கு எடிட்டர் என முடிவு செய்துவிட்டேன். ட்ரெய்லருக்கு கூட நான் ஐடியா எதுவும் கொடுக்கவில்லை. அவர் போக்கிலேயே விட்டுவிட்டேன்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இங்கிருந்தபடியே மாசிடோனியாவில் உள்ள 72 இசைக்கலைஞர்களை வைத்து வீடியோ ஸ்கிரீன் மூலமாக பின்னணி இசை அமைத்து அதிர வைத்துள்ளார். இரண்டு த்ரில்லர் படங்கள் இயக்கியிருந்தாலும் இது போன்ற ட்ராமா பாணி படம் இயக்குவதுதான் எனக்கு பிடிக்கும். அதனாலேயே 48 நாட்களிலேயே இந்தப்படத்தை எளிதாக முடிக்க முடிந்தது,” என்றார்.
நாயகன் விஜய் தேவரகொண்டா பேசும்போது,
“முதல் பத்திரிகையாளர் சந்திப்பின் போது மற்றவர்கள் பேசுவது எதுவும் புரியாத நிலையில் அதை கவனிக்காமல், எண்ணித்துணிக கருமம் என்கிற திருக்குறளை திரும்பத் திரும்ப மனப்பாடம் பண்ணிக் கொண்டு இருந்தேன். ஆனால் இப்போது தமிழில் நானே திருக்குறள் ஒப்பிக்கும் அளவுக்கு வந்துவிட்டேன். இயக்குனர் ஆனந்த் சங்கருடன் பணியாற்றியது ரொம்ப ஈஸியாக இருந்தது.
இந்தப் படம் குறித்து டிவிட்டரில் அடிக்கடி மரண வெயிட்டிங் என கமெண்ட் போடப்பட்டு இருந்தது. அதேபோல நானும் இந்தப் படத்திற்காக மரண வெயிட்டிங். இந்தப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை வெல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை,” என்றவர் பேச்சின் முடிவில் திருக்குறள் ஒன்றை அழகாக உச்சரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
‘நோட்டா’ வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.