தமிழ் சினிமாவில் சில படங்கள் டைட்டிலிலேயே நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்துவிடும்.
அப்படி ஒரு படமாக ‘ஓய்’ படம் அமைந்துள்ளது. மார்க் ஸ்டுடியோ தயாரிப்பில் பிரான்சிஸ் மார்க்கஸ் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் கீதன் பிரிட்டோ, ஈஷா, அர்ஜுனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் இது.
‘ஓய்’ என்ற பெயர் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. ஆனால், படத்தில் நாயகி, நாயகனை ‘ஓய்’ என்று அழைக்கும் போது அவர் கவனிக்காமல் போய் விட அதனால் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதையாம்.
இளம் கலைஞர்கள் இணைந்துள்ள இந்தப் படத்திற்கு இளையராஜாவின் இசை தனி அந்தஸ்தைக் கொடுத்துவிட்டது என்று பெருமைப்படுகிறார் படத்தின் இயக்குனர் பிரான்சிஸ் மார்க்கஸ்.
“இந்தப் படத்தில் இசை என்பது மிக முக்கியமான ஒன்று. படத்தைப் பார்க்கும் போது அது உங்களுக்கும் புரியும். இளையராஜா சார் இந்தப் படத்திற்காக இசையமைப்பாரா என்று சந்தேகமாக இருந்தது. படத்தில் புரொடக்ஷன் கன்ட்ரோலாக இருக்கும் சங்கிலி முருகன் சாரிடம் இளையராஜா இசைதான் வேண்டும் என்று சொன்னேன். அவர்தான் இளையராஜா சாரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
கதை கேட்டதும் அவருக்குப் பிடித்து விட்டது, படத்திற்கு இசையமைக்க சம்மதம் தெரிவித்தார். அவருடைய இசையில் விவேகா முதல் முறையாக பாடல்களை எழுதியிருக்கிறார். கிளைமாக்சில் இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப் பெரிய உயிரைக் கொடுத்துள்ளது.
கிராமத்துக் கதையை மிகவும் சுவாரசியத்துடனும், நகைச்சுவையுடனும் கொடுத்திருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர் மார்க்கஸ்.