ஸ்ரீ முருகா மூவி மேக்கர் தயாரிப்பில், முனுசாமி இயக்கும் படம் ‘ரீல்’.
இப்படத்தில் உதய்ராஜ், அவந்திகா, கலக்கப் போவது யாரு சரத் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
அச்சு ராஜாமணி பின்னணி இசையமைக்க, சந்தோஷ் சந்திரன் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் முனுசாமி கூறியதாவது,
“இந்தத் திரைப்படத்தில் மிகப் பெரிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். இது வழக்கமான கதையாக இருந்தாலும், கதை சொல்லலில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி.
வேலையில்லாத ஒரு பையனுக்கும், கிராமத்துப் பெண்ணுக்கும் இடையே நிகழும் காதலையும், சமூகம் அவர்களை எப்படி நடத்துகிறது என்பதையும் சொல்லும் படம் இது.
காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு புதியவை இல்லையென்றாலும், அதன் வடிவமைப்பே அவற்றை தனித்துக் காட்டுகிறது . தலைப்பு என்பது ஒரு படத்தின் முக்கிய அம்சம், இப்படத்தின் தலைப்பான “ரீல்” என்பது எதற்காக என்ற கேள்விக்கு படத்தின் கதையே பதில் கூறும்.
படத்தின் இறுதியில் வரும் திருப்பங்களும், கூறப்பட்டிருக்கும் கருத்தும் மக்களை வெகுவாகக் கவரும்.
நடிகர் உதயராஜ் படம் பற்றிக் கூறுகையில்,
“இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பளித்த மொத்த குழுவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் இரண்டு வித்தியாசமான வாழ்க்கை முறைகளைப் பற்றியது. துல்லியமாக சொல்வதென்றால், வசதியான குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஒரு பையனைப் பற்றியும், கிராமத்தில் இருந்து தன் வாழ்வாதாரத்திற்காக நகரத்துக்கு வந்த பெண்ணை பற்றியும் பேசும் படம். அவளது அப்பாவியான தன்மையால் அவளை அனைவரும் ஏமாற்றுகிறார்கள்.
நாயகனும், நாயகியும் எவ்வாறு சந்தித்துக் கொள்கிறார்கள், அதற்குப் பிறகு என்ன ஆகிறது என்பது மீதிக் கதை. இத்திரைப்படம் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளால், சஸ்பென்ஸ் காட்சிகளால் நகர்கிறது.
மலையாளத்தில் நான் நடித்த சில குறும்படங்களின் மூலம் தான் சினிமாத் துறையில் என் பயணம் துவங்கியது, அங்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும், என் முக்கிய நோக்கம் தமிழ் படத்தில் நடிப்பதே. இப்போது ‘ரீல்’ படத்தின் மூலம் அது நிறைவேறி இருக்கிறது.
திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டது. படத்தை பிப்ரவரி மாத இறுதியில் வெளியிடும் பணிகள் நடந்து வருகின்றன.
