நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, புதுமுகம் மேகா நாயகியாக நடிக்க, ரதன் இசையமைப்பில் பாலா இயக்கத்தில் உருவான படம் ‘வர்மா’.
தெலுங்கில் விஜய் தேவரகொன்டா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ படத்தின் டீசர் கூட வெளியிடப்பட்டு அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இப்போது அந்தப் படத்தை வெளியிட மாட்டோம் என தயாரிப்பு நிறுவனமான இ 4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சற்று முன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,
“அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ‘வர்மா’ எனத் தலைப்பிட்டு பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் முதல் காப்பி அடிப்படையில் தயாரிக்க முடிவு செய்தோம்.
எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இறுதி காப்பியைப் பார்த்து எங்களுக்குத் திருப்தியில்லை. அதில் பல படைப்பு வித்தியாசங்களும், மற்ற வித்தியாசங்களும் இருந்தன. அதனால், அந்த பிரதியை வெளியிட வேண்டாம் என முடிவு செய்தோம்.
அதற்குப் பதிலாக புதிதாக மீண்டும் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். ஒரிஜனல் படத்தின் ஆன்மா சிறிதும் குறையாத விதத்தில் அதற்கு உண்மையாக துருவ் நாயகனாக நடிக்க படமாக்க உள்ளோம்.
இயக்குனர், மற்ற நட்சத்திரங்கள், கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இந்த எதிர்பாராத திருப்பமும், நிகழ்வுகளும் எங்களுக்கு மிகப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் சினிமா மீது எங்களுக்குள்ள அன்பால் அந்த அற்புதமான படத்தின் தரம் தமிழில் எந்த விதத்திலும் குறையக் கூடாது என நினைக்கிறோம்.
புதிய குழுவுடன் ஓய்வில்லாமல் உழைத்து படத்தை ஜுன் 2019 வெளியிட உள்ளோம்,” என அறிவித்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகத்தில் எடுத்து முடிக்கப்பட்ட ஒரு படம் வெளிவராது, வேறு படம் எடுக்கப் போகிறோம் என ஒரு தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருப்பது இதுவே முதல் முறை.
மேலும், இயக்குனர் பாலா தமிழ்த் திரையுலகத்தில் வித்தியாசமான இயக்குனர் என்ற பெயரைப் பெற்றவர். அவருடைய படத்திற்கு இப்படி ஒரு அறிவிப்பா என சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
வர்மா டீசர்