‘கபாலி’ படம் 300 கோடி வசூலித்ததா என கடந்த இரண்டு நாட்களாக அனைவரும் பேசிக் கொண்டிருந்த வேளையில் ‘கபாலி’ படத்தின் இத்தனை பரபரப்புக்கும், கலெக்ஷனுக்கும் காரணமாக இருந்த ‘கபாலி’ படத்தின் டீசர் யு டியூபில் 3 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. இதுவரை தமிழ்த் திரையுலகில் எந்த ஒரு டீசரும் இவ்வளவு பார்வைகளைப் பெற்றது இல்லை.
இந்திய சினிமாவில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் இத்தகைய சாதனையை ஏற்படுத்தியதில்லை. சற்று முன் வரை ‘கபாலி’ டீசர் 3 கோடியே 70 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது. டீசருக்கு இதுவரை 4 லட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். 16 ஆயிரம் பேர் மட்டுமே அன்லைக் செய்துள்ளனர்.
‘கபாலி’ படத்திற்கு டிரைலர் ஒன்றையும் வெளியிட்டிருந்திருந்தால் அதுவும் மிகப் பெரிய சாதனையைப் படைத்திருக்கும். ஆனால், டிரைலர் சாதனையில் ரம்ஜான் தினத்தன்று வெளியான சல்மான்கான் நடித்த ‘சுல்தான்’ ஹிந்தித் திரைப்படம் 3 கோடியே 1 லட்சம் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. ஆனால், சுல்தான் டிரைலரை 2 லட்சம் பேர் மட்டுமே லைக் செய்துள்ளனர். 16 ஆயிரம் பேர் அன்லைக் செய்துள்ளனர்.
‘கபாலி’ பட டிரைலர் வெளிவந்திருந்தால் டீசர், டிரைலர் இரண்டிலும் ஒரு தமிழ்ப் படம் சாதனை புரிந்ததாக திரை வரலாற்றில் எழுதப்பட்டிருக்கும். ஒரு தமிழ்ப் படத்திற்கும், தமிழ்ப்பட நடிகருக்கும் இப்படி ஒரு வரவேற்பா என மீண்டும் மீண்டும் அனைவரும் ஆச்சரியப்பட்டுள்ளனர். ‘கபாலி’ படம் வசூலிலும் பல புதிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது.