நேற்று காலை 9.30 மணிக்குதான் முத்து போன் போட்டு பேசிக் கொண்டிருந்தார்…வழக்கமாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அவர் பேசுவது நீண்ட நாள் வழக்கம்…வெளியான படங்களைப் பற்றியும், பாடல்களைப் பற்றியும் மனம் விட்டுப் பேசுவார்…நேற்று கூட ‘ஜோக்கர்’ பட இயக்குனர் ராஜு முருகன் அண்ணனும் அவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்ற தகவலைச் சொன்னார்.
வீட்டில் உட்கார்ந்திருக்க முடியவில்லை, கடந்த 15 வருடங்களில் வெளிவந்த படங்களின் பட்டியலை அனுப்புங்கள், எனது பாடல்களை முழுமையாகத் தொகுத்து புத்தமாகப் போடலாம் என நினைக்கிறேன். இந்த ஓய்வில் அதை முடித்துவிடுகிறேன் என்றார். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அதை அனுப்பியிருந்தேன்…கொரியர் கிடைத்தது மகிழ்ச்சி வெற்றி, சில படங்கள் வெளியாகிவிட்டதா என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். வாரா வாரம் வெளியாகும் படங்களின் பட்டியலை அவருக்கு அனுப்பிக் கொண்டேயிருப்பேன்…
இன்று காலையில் போனில் தகவல் வந்ததும் வந்த அதிர்ச்சியிலிருந்து தற்போதுதான் சற்று மீண்டேன்…பொதுவாகவே அவரவர்க்கு ஊர்ப்பாசம் உண்டு. நானும் காஞ்சிபுரம், முத்துவும் காஞ்சிபுரம் என்பதையும் மீறி நான் படித்த பச்சையப்பன் கல்லூரியில், அதே இயற்பியல் படிப்பில் எனக்கு ஜுனியராக இருந்தவர் முத்து. அது அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது…
ராஜ் டிவியில் பணியாற்றிய போது அண்ணன் சீமான் இயக்கிய ‘வீர நடை’ படத்திற்காக அவரை முதன் முதலாக பேட்டி எடுத்த போதுதான் அவரும் காஞ்சிபுரம் என்று தெரிந்தது…அன்றிலிருந்து இன்று வரை அதே நட்புடன் பழகி வந்தவர்…
அவருடைய அப்பா எங்கள் வீட்டில் எதிரில்தான் ‘அன்னை நூலகம்’ நடத்தி வந்தார். அங்கிருந்து நான் எடுத்து படித்த முதல் புத்தகம் ‘முடிவற்ற பயணங்கள்’…இன்னமும் அது ஞாபகத்தில் உள்ளது…என்னைப் பொறுத்தவரையில் முத்துவின் திரைப் பயணம் முடிவற்ற பயணம்தான்…அவர் என்றுமே தமிழ் ரசிகர்களின் மனதில் இருப்பார்…
‘ஆனந்த யாழை’..பாடலுக்காக தேசிய விருது வாங்கிய போது, அவருடன் அந்த விருதை வாங்கி என் கையில் வைத்துக் கொண்டு ஏதோ நான் பெற்றதைப் போன்று சந்தோஷப்பட்டேன்..இரண்டாவது தேசிய விருதையும் பெற்ற போது மிகவும் மகிழ்ச்சியடைந்தார்..
அவருடைய அப்பா மீது அவருக்கு அளவுக்கதிகமான பாசம் உண்டு. சில வருடங்கள் முன்புதான் அவருடைய அப்பா மரணமடைந்தார். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் இடம் பெற்ற அப்பா பாசத்தை வெளிப்படுத்திய ‘தெய்வங்கள் எல்லாம்’ பாடல் அவருக்கு மிகவும் பிடித்த பாடல்..மகள் பாசத்தைப் பற்றி எழுதிய ஆனந்த யாழை பாடலை விடவும், ‘தெய்வங்கள் எல்லாம்’ பாடலை உணர்ச்சி பொங்க எழுதியிருப்பார்…
அப்பா மீது பாசம் வைத்துள்ள முத்து இப்படி மகனையும், மகளையும், மனைவியையும் தவிக்க விட்டு அதற்குள் மறைந்துவிட்டாரே…
அவர் எழுதியுள்ள 100க்கும் மேற்பட்ட பாடல்கள் இன்னமும் வெளிவர வேண்டியுள்ளது…உடல்நிலை சரியில்லாத போது ஏ.ஆர்.ரகுமான் சார், கூட பாடலை அனுப்பி விடுங்கள் போதும் நான் பார்த்துக் கொள்கிறேன், ஓய்வில் இருங்கள் என்று சொன்னதாகச் சொன்னார்..
எத்தனை பாடல்கள், பாடல் வரிகளைப் பற்றி அடிக்கடி பாராட்டிப் பேசுவேன்…ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல…முத்து..நீ எங்கள் சொத்து…எவ்வளவோ எழுதத் தோன்றுகிறது…முடியவில்லை…கண்களை கண்ணீர் மறைக்கிறது…
மீண்டும் பிறந்து வா முத்து…
– வெற்றிவேல்