கீ – லைக், ஷேர் பின்னணி என்ன ?

நாடோடிகள் , ஈட்டி, மிருதன், போன்ற வெற்றி படங்களைத் தயாரித்த நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனத்தின் 10வது படமாக உருவாகியுள்ள ‘கீ’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

ஜீவா, நிக்கி கல்ரானி, அனைகா, ஆர்ஜே பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். காலீஸ் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவர். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குனர் காலீஸ், ஜீவா, நிக்கி கல்ராணி, தயாரிப்பாளர் செராபின், ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஆகியோல் கலந்து கொண்டு பேசினர்.

ஜீவா பேசுகையில்,

“வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால், நிக்கி கல்ராணியை பார்த்துதான் பல படங்கள் பண்ண வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். படத்திற்கு விஷால் அருமையாக இசையமைத்துள்ளார்.

அருமையான கதையைக் கொண்டது இத்திரைப்படம். தற்போதைய டெக்னாலஜியில் உஉள்ள பிரச்சனையைக் கூறும் படம். கூப்பிட்ட நேரத்தில் வந்து ஒளிப்பதிவினை மேற்கொண்ட அபிநந்தன் அவர்களுக்கு என் நன்றிகள். சிறப்பான பணியைச் செய்துள்ளார்.
காலீஸ் சிறந்த இயக்குனர். இதுபோன்ற நிறைய இளைய புதுமுக இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவிற்குத் தேவை. இளைய இயக்குனர்கள் வந்தால்தான் புதிய எண்ணங்கள் தோன்றும். புதிய எண்ணங்கள் இருந்ததால் தான் பல பரிமாணங்களில் திரைப்படங்களைத் தர முடியும்.

ஆர்ஜே பாலாஜி, அனைகா அருமையாக நடித்துள்ளனர். படத்தின் காட்சிகள் மிகப் பிரமாண்டமாக வந்துள்ளது. படத்தொகுப்பாளர் நாகூரன் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தப் படம் ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. உங்கள் அன்பாலும் ஆதரவாலும் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்,” என்றார்.

நிக்கி கல்ரானி பேசும் போது,

“மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் வருகிறது என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்களுக்கும் காலீஸ் அவர்களுக்கும் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 4 ,5 வருடங்களாக இந்த படத்தை ஒரு குழந்தை போல் பாதுகாத்து வந்துள்ளனர். ஏப்ரல் 12ம் தேதி படம் வெளியாகிறது. இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என முழுமையாக நம்புகிறேன். காலீஸ் ஒரு மிகச் சிறந்த இயக்குனர். ஜீவாவுடன் நான் முதலில் நடித்த படம் இது. ஆனால், கலகலப்பு 2 படம் முதலில் ரிலீஸ் ஆனது. இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கேமராமேன் அபிநந்தன் ஒளிப்பதிவு மிகப் பிரமாதமாக வந்துள்ளது,” என்றார்.

இயக்குனர் காலீஸ் பேசுகையில்,

“ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது. ஒரு 4 வயது குழந்தை ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் அந்தக் குழந்தை கூட இந்த படத்தைப் பார்க்க வேண்டும். ஒரு 70 வயது முதியவர் செல்போன் பயன்படுத்தினால் அவரும் இந்த படத்தைப் பார்க்க வேண்டும்.

நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன ? என்பதை எடுத்துக் கூறும் படம். இந்தப் படம் வெளிவர கடைசிவரை உறுதுணையாக இருந்த நடிகர் ஜீவா, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிக்கி கல்ரானி ஒரு சின்சியரான நடிகை. அருமையாக நடித்துள்ளார். படப்பிடிப்புக்கு விரைவாகவே வந்து விடுவார். அபி நந்தனின் ஒளிப்பதிவு , நாகூரானின் படத்தொகுப்பு என அனைவரும் அருமையாக வேலை செய்துள்ளனர். வில்லனாக நடித்துள்ள பத்ம சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்,” என்றார்.

கோவிந்த் பத்ம சூர்யா பேசும் போது,

“தமிழ்ப் படத்தில் முதன் முதலாக நடித்துள்ளேன். அதுவும் வில்லனாக நடித்துள்ளேன். வாய்ப்பளித்த இயக்குனர் காலீஸ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

Read Previous

உறியடி 2 – டீசர்

Read Next

கொலையுதிர் காலம் – டிரைலர்