ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளிவர உள்ள ‘தரமணி’ படம் மூலம் நாயகனாக அறிமுகமாக உள்ளவர் வசந்த் ரவி.
படத்தின் விளம்பரங்களில் இது ‘ஏ’ படம், அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வாருங்கள் என அழைப்பு விடுத்திருப்பது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
தன் அறிமுகப் படம் பற்றி வசந்த் ரவி கூறுகையில்,
”என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவம் ‘தரமணி’. இயக்குனர் ராம் சார் எனக்கு பல வருடங்களாகப் பழக்கம். ‘தரமணி’ படக்கதையை என்னிடம் கூறி இக்கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என அவர் கூறிய போது சந்தோஷத்தில்க் துள்ளி குதிக்க ஆரம்பித்துவிட்டேன். அதன் பிறகு இந்த கதாபாத்திரத்திற்கு எந்த மாதிரியான பயிற்சிகள் எடுக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், எந்தப் பயிற்சியும் இல்லாமல் திறந்த புத்தகம் போல படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என்றார்.
இப்படத்தின் மூலம் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் எனக்கு அவர் நிறைய கற்றுக் கொடுத்தார். ஒரு கால் சென்டர் ஊழியராக நடித்துள்ளேன். ஆண்ட்ரியாவுடன் பணி புரிந்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். இப்படத்தின் டீசர்களுக்குக் கிடைத்த வரவேற்பு, அதில் வரும் வசனங்களுடன் ரசிகர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதனால் மட்டுமே நடக்கிறது. படம் முழுக்கவே இப்படிப்பட்ட கட்சிகளும் வசனங்களும் இருக்கும்.
‘தரமணி’ படத்தின் கதாநாயகனாக நடித்ததிலும், இயக்குனர் ராம் சார் மூலம் தமிழ் சினிமாவில் கால் எடுத்து வைப்பதிலும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இப்படத்தின் மேல் மிகவும் நம்பிக்கை வைத்து தயாரித்து, ஒரு நட்சத்திரத்தின் படம் போல் விளம்பர யுக்திகளை கையாண்டு வருவத்திற்காக தயாரிப்பாளர் JSK சதிஷ் குமாருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்,” என்கிறார் வசந்த் ரவி.