நாடெங்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு ஜுலை மாதம் அமல்படுத்தப்பட்ட சமயத்தில் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசின் கேளிக்கை வரியும் விதிக்கப்படும் என்ற நிலைமை உருவானது.
திரைப்படத் துறையினர் அரசிடம் பேசியதைத் தொடர்ந்து கேளிக்கை வரி விதிப்பு தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே சில சந்திப்புகள் நடைபெற்றன. எப்போது கேளிக்கை வரி விதிக்கப்படும், எவ்வளவு விதிக்கப்படும் என்பது தெரியாமல் இருந்தது.
கடந்த வாரம் தமிழக அரசு தியேட்டர் டிக்கெட் கட்டணங்களுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கப்படும் என்று அறிவித்தது. இதற்கு திரையுலகத்தில் இருந்து எதிர்ப்பு எழுந்தது.
இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் கேளிக்கை வரி விதிப்பை முற்றிலும் விலக்க வேண்டுமென்று கோரி, வரும் அக்டோபர் 6ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று முடிவெடுத்துள்ளார்கள்.
அது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை…
“தமிழ்த் திரைப்படத்துறையில் ஏற்கனவே ‘பைரசி’ (Piracy) முதற்கொண்டு சமீபத்தில் விதிக்கப்பட்ட 18% / 28% ஜிஎஸ்டி, என பல்வேறு காரணங்களால் பெருத்த இழப்பினை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழக அரசால் கடந்த 27.9.2017 அன்று தமிழ்ப் படங்களுக்கு அறிவித்த 10% கூடுதல் கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மேலும், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைத்துறை சார்ந்த அமைப்புகள் சார்பில் கடந்த மாதம் தமிழக அரசிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களிலும் மற்றும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களிலும் பலமுறை எங்களது தரப்பில் உள்ள விளக்கங்களை அளித்தோம். இருந்தும், பல ஆண்டுகளாக முறைப்படுத்தப்படாமல் உள்ள திரையரங்கு நுழைவு கட்டணத்தினை முறைப்படுத்தாமல் 10% கேளிக்கை வரி மட்டும் விதித்திருப்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தில் பெரும் இழப்புகளையும், குழப்பங்களை மட்டுமே தொடர்ந்து ஏற்படுத்தும்.
இது சம்மந்தமாக இன்று 03.10.2017 தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் கலந்துக் கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்கு கட்டணத்தினை முறைப்படுத்தி மேற்கண்ட கேளிக்கை வரியை தமிழ் படங்களுக்கு முற்றிலும் விலக்கிட வேண்டுமென்று அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதனால், வருகிற வெள்ளிக்கிழமை (06.10.2017) முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்,” என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பு சமயத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தைப் போன்று தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பில் மீண்டும் ஒரு வேலை நிறுத்தம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்களும் கேளிக்கை வரி விதிப்பிற்குப் பிறகு கலந்து ஆலோசித்து வருகிறார்கள். அவர்கள் தரப்பிலும் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கமே புதிய படங்களை அக்டோபர் 6 முதல் வெளியிடுவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.
அக்டோபர் 6ம் தேதி பல படங்கள் வெளியாக ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இப்போது அந்தப் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அக்டோபர் 6ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ‘விழித்திரு, களத்தூர் கிராமம், திட்டிவாசல்’ ஆகிய படங்கள் இதற்கு முன்பும் சில முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட படங்கள். இப்போது மீண்டும் அந்தப் படங்கள் வெளியாகாமல் போனால் அப்படத் தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும்.
இது பற்றி ‘திட்டி வாசல்’ இயக்குனர் பிரதாப் முரளி கூறுகையில், “நினைச்சா strike ஆ… 6ம் தேதி இத்தனை படம் ரீலீஸு…களத்தூர் கிராமம் படம் தயாரிப்பாளர் கிட்ட யாருமே கேட்கல… விழித்திரு படம் தயாரிப்பாளர் விடியல் ராஜீ , திட்டிவாசல் பட தயாரிப்பாளர் சீனிவாச ராவ் அவர் கிட்ட எதுமே கேட்கல பின் எப்படி தயாரிப்பாளர் அனைவரும் எடுத்த முடிவாக இருக்கும் இப்படி தன்னிச்சையாக செயல்படும் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த தான்தோன்றித்தனம் வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று,” எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, திருட்டு இணையதளங்கள், ஜிஎஸ்டி வரி விதிப்பு, தற்போது கேளிக்கை வரி என தொடர் சிக்கலில் தமிழ்த் திரையுலகம் உள்ளது. இந்த சிக்கல்களைத் தவிர்க்க, தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், இயக்குனர்கள் என அனைவரும் ஒன்று கூடி பேசி இதற்கு ஒரு தீர்வை கொண்டு வந்தால்தான் தமிழ்த் திரையுலகத்திற்கு விடிவு காலம் பிறக்கும்.