“நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர்” உள்ளிட்ட 16 ஹிட் படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம் அந்த அனைத்து படங்களையும் இயக்கியவர். அந்த கால கட்டத்தில் வணிக ரீதியான சக்சஸ் புல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கவனிக்கப் பட்டவர் மணி வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.
மணிவாசகத்தின் மகனான காந்தி மணிவாசகம் தயாரித்து, இயக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்க உள்ளனர். இப்படத்திற்கு ரகுநந்தன் இசையமைக்கிறார்.
அப்பாவை பின்பற்றி தயாரிப்பு, இயக்கம் என்று களமிறங்கும் காந்தி மணிவாசகம், கதை அமைப்பிலும், காமெடி, கமர்ஷியல் என்று அவரது அப்பா பார்முலாவையே இவரும் கையிலெடுக்கிறார்.
விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.