’வேட்டையன்’ Vs ‘கங்குவா’: பின்னணியில் மாபெரும் சிக்கல்

‘வேட்டையன்’ மற்றும் ‘கங்குவா’ இரண்டு படங்களும் ஒரே தேதியில் வெளியாகாது. அதன் பின்னால் மாபெரும் சிக்கல் ஒன்று உள்ளது.

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், ராணா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தினை அக்டோபர் வெளியீடு என விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

அதே தேதியில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ படமும் வெளியாகவுள்ளது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 10-ம் தேதி வெளியீடு என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது ‘கங்குவா’ படக்குழு.

‘வேட்டையன்’ மற்றும் ‘கங்குவா’ ஆகிய படங்கள் ஒரே தேதியில் வெளியாவதில் மாபெரும் சிக்கல் இருக்கிறது. இரண்டு படங்களின் ஓடிடி உரிமையினையும் அமேசான் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இரண்டும் ஒரே தேதியில் வெளியானால், இரண்டும் ஒரே தேதியில் ஓடிடி தளத்தில் வெளியாகும் சூழலும் ஏற்படும். இதனால் இரண்டில் ஒரு படத்தினை தள்ளி வெளியிடச் சொல்லி நிர்பந்திக்க அமேசான் நிறுவனம் திட்டமிடும் எனக் கூறப்படுகிறது.

ஏனென்றால், இரண்டுமே பெரிய முதலீட்டை போட்டு ஓடிடி உரிமையினை கைப்பற்றி உள்ளது அமேசான் நிறுவனம். இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராவிட்டால், இரண்டில் ஒரு படத்தின் ஓடிடி உரிமையினை அமேசான் நிறுவனம் திரும்ப அளித்துவிடும் என்கிறார்கள். இந்தச் சிக்கலில் வெல்லப் போவது தயாரிப்பாளரா அல்லது ஓடிடி நிறுவனமா என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும்.

Read Previous

‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகம் எப்போது? – தயாரிப்பாளர் பதில்

Read Next

எனது படங்களில் பிரமாண்டமாக உருவானது “மழை பிடிக்காத மனிதன்” தான் – விஜய் ஆண்டனி