feஇ 4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கிரீசய்யா இயக்கத்தில், ரதன் இசையமைப்பில், துருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இசையமைப்பாளர் ரதன் பேசுகையில்,
“என் பெயர் வித்தியாசமாக இருந்ததை வைத்து, என் தாய் மொழி தெலுங்கு என்று பலர் நினைத்தனர், ஆனால் நான் பச்சைத் தமிழன். இந்த மேடையில் நான் இருப்பதற்குக் காரணம் நடிகர் விக்ரம் தான். தொழில்நுட்ப கலைஞர்களை ஊக்குவிப்பதிலும், மரியாதை தருவதிலும் விக்ரமிற்கு நிகர் அவர் மட்டுமே. ஒரு இரவு, நானும் எனது ஒலிப்பதிவாளரும் தாமதமாக வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென்று, பின்னால் இருந்து ஒரு மென்மையான குரல், ‘ஒரு கப் காபி வேண்டுமா?’ என்று அவரே கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது,” என்றார்.
பிரியா ஆனந்த் பேசுகையில்,
“எஸ்ரா’ மூலம் மலையாளத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவிற்கு நன்றி. நான் ‘இங்கிலிஷ் விங்லிஷ்’ திரைப்படத்தில், நடிகை ஸ்ரீதேவி உடன் பணிபுரிந்தபோது, அவர் ஒரு அம்மாவாக இருப்பதைக் கண்டேன். அதேபோல், ஆதித்ய வர்மாவில் பணிபுரிந்தபோது, விக்ரம் அவர்கள் அக்கறையுள்ள அப்பாவாக இருப்பதை உணர்ந்தேன். துருவ் உடன் பணிபுரிவது சிறப்பாக இருந்தது. ஆதித்யா வர்மா மிகவும் புதியாக இருக்கும்,” என்றார்.
நாயகி பனிதா சாந்து பேசும் போது,
“படத்தைத் தயாரிக்கும் போது விக்ரம் சார் அளித்த மகத்தான ஆதரவுக்கு நன்றி. விக்ரம் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். நானும் துருவும் திரையில் அழகாக இருக்க தினமும் அயராது உழைத்ததற்கு நன்றி. துருவ்வின் திரைப்பயணத்தின் துவக்கத்தில் இருப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்றார்.
துருவ் விக்ரம் பேசுகையில்,
“நான் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சென்று பேசியிருக்கிறேன். ஆனால், இந்த விழா சற்று கூடுதல் சிறப்பு, காரணம் என் குடும்பம் இங்குள்ளது. எனது குடும்பத்தினால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன்.
இந்த படத்தில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த குழுவிற்கு நன்றி.
அப்பாவுக்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு 100 சதவீதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும்,” என்றார்.
மேடையில் மகன் துருவ்வுடன் சேர்ந்து பேச வந்த நடிகர் விக்ரம்,
“துருவைப் போல பேச எனக்குத் தெரியாது. எனது 12-ம் வகுப்பு முடிவுகளுக்காக காத்திருக்கும் போதோ அல்லது சேது திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கும் போதோ கூட ஒரு பதற்றத்தை உணரவில்லை.. இன்று மட்டுமல்ல, இப்போது சில காலமாக நான் பதற்றமாக இருக்கிறேன்.
துருவின் டப்ஸ்மாஷைக் கண்ட தயாரிப்பாளர் இந்த பாத்திரத்தில் நடிக்க துருவ் வேண்டுமென என்னை அணுகினார்.
இயக்குனர் கிரீசய்யா மற்றும் இணை இயக்குனர் ஷரியா இல்லாமல், இந்த படம் சாத்தியமில்லை,” என்றார்.
ஆதித்ய வர்மா – இசை வெளியீடு புகைப்படங்கள்…