2010ல் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் கேரள நடிகையான அமலா பால். அந்த வருடம் வெளிவந்த ‘சிந்து சமவெளி’ படம் சர்ச்சையான கதையுடன் இருந்ததால் அமலா பால் பிரபலமானார். அடுத்து வெளிவந்த ‘மைனா’ படம் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
அடுத்து ‘தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டுப் பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், ஆடை, கடவர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் விஜய்யும் அவரும் ‘தெய்வத் திருமகள், தலைவா’ படங்களில் ஒன்றாகப் பணிபுரிந்த போது காதல் வந்து, பின்னர் திருமணமும் செய்து கொண்டனர். இரண்டே வருடங்களில் பிரிந்து விவாகரத்தும் பெற்றனர்.
தற்போது மலையாளத்தில் ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் நடித்து வருகிறார். இன்று அமலா பாலுக்குப் பிறந்தநாள். அதை முன்னிட்டு அவருக்கு ஜகத் தேசாய் என்பவர் வாழ்த்து தெரிவித்தன் மூலம் அவர்தான் அமலாவின் காதலர் என்பது தெரிய வந்துள்ளது.
ஜகத் தேசாய் அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில், “எனது ஜிப்ஸி குயின் ‘சரி’ என சொல்லிவிட்டார். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மை லவ், வெட்டிங் பெல்ஸ்,” My Gypsy Queen said yes ❤️ #weddingbells என பதிவிட்டுள்ளார். அமலாவும் அந்தப் பதிவை ‘ஷேர்’ செய்துள்ளார்.
அமலாவிடம் மோதிரம் கொடுத்து, முத்தம் தந்து காதலைச் சொல்லும் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். புது காதல் ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.