நான் மட்டும் நடித்தால் போதாது – கமல்ஹாசன்

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ், ராஜ்குமார் தியேட்டர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘பாபநாசம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது,

“ஏதோ ஒற்றை ஆளாக இந்தப் படத்தை நான் மட்டும் உருவாக்கியதுபோல், எல்லோரும் என்னைப் பற்றியே பேசினார்கள். அது சரியல்ல, சினிமா என்பது ஜனரஞ்சகம் மட்டுமல்ல, ஜனநாயகமும்கூட. சினிமா ஒரு கூட்டு முயற்சி. எல்லோரும் சேர்ந்து செய்தால்தான் சிறப்பாக வரும்.

நான் மட்டும் நடித்து பெயர் வாங்கினால் போதாது, அனைவரும் நன்றாக நடித்தால்தான் ஒரு படத்திற்குப் பெயர் கிடைக்கும். ‘பாபநாசம்’ படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த படம் 3 மொழிகளில் வெற்றி பெற்ற படம். அதை எங்கள் கையில் ஒத்திகை பார்க்க தந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்தவுடன், படக் காட்சிகளை திரையிட்டுப் பார்த்தேன். அப்போது ஒரு நல்ல நடிகையை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது. அந்தளவுக்கு கவுதமி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இதை நான் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக சொல்லவில்லை, நிஜமாகவே கவுதமி திறமையான நடிகை. நல்ல படைப்புகளுக்கு நீங்கள் எப்போதுமே ஆதரவு தருவீர்கள். அதே போல இந்தப் படத்திற்கும் தருவீர்கள் என்று நம்புகிறேன்,” என கமல்ஹாசன் பேசினார்.

இந்தச் சந்திப்பில் தயாரிப்பாளர்கள் ஸ்ரீப்ரியா, ராஜ்குமார், ஜார்ஜ் பயஸ், நடிகைகள் கௌதமி, நிவேதா தாமஸ், பேபி எஸ்தர், நடிகர்கள் அருள்ராஜ், ‘பசங்க’ ஸ்ரீராம், டெல்லி கணேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களும், இசையமைப்பாளர் ஜிப்ரான், மற்ற தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர். இயக்குனர் ஜீது ஜோசப் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

‘பாபநாசம்’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

Read Previous

Maya – Official Trailer

Read Next

சூர்யா – ஹரி இணையும் 5வது படம் ‘சிங்கம் 3’…