தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் சிறிய இடைவெளியில் இரண்டு சரித்திரப் படங்களைப் பார்த்து ரசிக்கப் போகிறார்கள்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்குத் திரையுலகின் ஆக்ஷன் ஹீரோவான பிரபாஸ் நாயகனாக நடிக்கும் ‘பாகுபலி’ படம் ஒரு சரித்திரப் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற சரித்திரப் படம் மூலம் அறிமுகமாகி நல்ல வரவேற்பையும் பெற்ற சிம்புதேவன் இயக்கத்தில் ஃபேன்டஸி கலந்த சரித்திரப் படமாக உருவாகியுள்ள படம் ‘புலி’.
‘புலி’ படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு ஒரே நாளில் 10 லட்சம் யு டியூப் ஹிட்ஸ்களை அள்ளியிருக்கிறது.
‘பாகுபலி, புலி’ இரண்டு படங்களுமே சரித்திரப் படங்கள் என்பதால் இரண்டு படங்களுக்கும் போட்டியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
‘பாகுபலி’ படத்தில் வில்லனாக ராணா டகுபதி, நாயகிகளாக அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிக்கிறார்கள்.
‘புலி’ படத்தில் வில்லனாக ‘நான் ஈ’ சுதீப், நாயகிகளாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்கள்.
‘பாகுபலி‘ படத்தில் அரசி(?)யாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார், ‘புலி’ படத்தில் அன்றைய கனவுக்கன்னி ஸ்ரீதேவி அரசியாக நடிக்கிறார்.
இப்படி ஒன்றுக்கொன்று போட்டி போடும் விதத்தில்தான் இரண்டு படங்களின் நட்சத்திரங்களும் இருக்கிறார்கள்.
ஆனால், ‘புலி’ படத்தின் டீசரை மட்டும் வைத்து ‘பாகுபலி’ படத்திற்குப் போட்டியா என்ற கேள்வியை எழுப்ப முடியாது. இரண்டு படங்களும் வெளிவந்த பிறகுதான் எது சிறந்தது என்று சொல்ல முடியும்.
ஆனால், தமிழில் இந்த இரண்டு சரித்திரப் படங்களுமே சரித்திரம் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.