‘நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்து யானை’ உட்பட பல படங்களைத் தயாரித்த எஸ். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் பட நிறுவனம், தற்போது அதர்வா நடிக்கும் ‘ஈட்டி’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடிக்கும் ‘மிருதன்’ என்ற படத்தை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவிருக்கிறார்கள்.
‘நாணயம், நாய்கள் ஜாக்கிரதை’ ஆகிய படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.
ஜெயம் ரவி ஜோடியாக லட்சுமி மேனன் முதல் முறையாக நடிக்கிறார். மற்றும் பேபி அனிகா, ஸ்ரீமன், காளி வெங்கட், ஆர்.என்.ஆர்.மனோகர், சாட்டை ரவி, கிரேன் மனோகர் மற்றும் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் ஹீரோவான அமித் பார்கவ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இமான் இசையமைக்க மதன் கார்க்கியின் வரிகளில் பாடல் பதிவு ஆரம்பமாகியுள்ளது. ‘கத்தி’ படத்தில் ‘ஆத்தி…’ பாடலைப் பாடிய விஷால் தட்லானி மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடிய இரண்டு பாடல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
‘மிருதன்’ படத்தில் புகைபிடிப்பது போன்ற காட்சிகளோ, குடிப்பது போன்ற காட்சிகளோ இடம் பெறப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஊட்டியில் 30 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு இம்மாதம் 18 ஆம் தேதி சென்னையில் துவங்கி, தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்று, அக்டோபர் மாத இறுதியில் முழு படப்பிடிப்பும் முடிவடைகிறது.