சிலம்பரசன் யார் என்று தெரிந்தவர்களுக்கு குறளரசன் யார் என்று கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.
பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் குறளரசன். இந்தப் படத்தின் இசை வெளியீடு இனிமேல்தான் நடக்க உள்ளது. இந்த நிலையில் இன்று குறளரசன் டிவிட்டரில் திடீரென போட்ட ஒரு பதிவு அவருக்கும் படத்தின் இயக்குனரான பாண்டிராஜுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
‘ஐந்து பாடல்களை இரண்டு மாதங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டேன். இறுதி ஒலிக்கலவை ரெடியாகிவிட்டது. படத்தைப் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறேன். விரவில் பின்னணி இசையமைக்கும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்,” என இன்று காலையில் ஒரு பதிவைப் போட்டிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் பாண்டிராஜ், “தம்பி நீ யாருன்னு எனக்குத் தெரியும். நான் யாருன்னு உனக்குத் தெரியும். நாம ரெண்டு பேரும் யாருன்னு ஊருக்கே தெரியும். தூக்கம் வந்தால் போயி தூங்கு போ’.
ஒரு நல்ல முதலாளிக்கு அழகு, உழைத்தவனின் வியர்வை காய்வதற்குள் ஊதியம் கொடுப்பது, ஒரு வருடம் சென்றாவது கொடுக்கலமே,” என டிவீட் செய்திருந்தார்.
அதைற்குப் பின் குறளரசன் சில மணி நேரங்களுக்கு முன் மீண்டும் ஒரு நீளமான பதிவைப் போட்டிருந்தார்.
“இதுவரை நான் ‘இது நம்ம ஆளு’ படத்தின் ஒரு நிமிட டீசரை மட்டுமே பார்த்திருக்கிறேன். மொத்த காட்சிகளையும் நான் எப்போது பார்க்கப் போகிறேன் என்று தெரியாது. ஒரு அறிமுக இசையமைப்பாளரை சில நாட்களுக்குள் பின்னணி இசையமைக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
ஐந்து பாடல்களை இரண்டு மாதங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டேன். மூன்று பாடல்களை மட்டுமே இதுவரை எடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் படத்தின் வெளியீட்டுத் தேதியை விரைவில் அறிவிப்பார். நான் அடுத்த ஆல்பத்திற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டேன்.
என் அண்ணன்தான் எனக்கு எல்லமே. அவரால்தான் நான் இன்னமும் இதைச் செய்து கொண்டிருக்கிறேன். பல சமயங்களில் நிராகரித்த போதும், அவரை கீழே விழ விடமாட்டேன்.
சீக்கிரமே என் அப்பாவுடன் பத்திரிகையாளர்களை சந்திப்பேன். என் வாழ்க்கையில் என்னை மிகவும் நோகடித்து விட்டார்கள். ‘இது நம்ம ஆளு’ இயக்குனர் பாடல்களையெல்லாம் ‘வேஸ்ட்’ என்று சொல்லிவிட்டார். ரசிகர்கள் பாடல்களைக் கேட்டு முடிவெடுக்கட்டும்,” என குறளரசன் டிவீட் செய்துள்ளார்.
குறளரசனின் அடுத்த டிவீட்டுகளுக்கும் சேர்த்து பதிலளிக்கும் விதமாக இயக்குனர் பாண்டிராஜ், “சீக்கிரமே மொத்த குழுவினருடன் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன். கடந்த இரண்டரை வருடங்களாக என்ன நடந்தது, ‘இது நம்ம ஆளு’ படத்திற்காக எவ்வளவு போராட்டங்களைச் சந்தித்தோம் என்பதை சொல்லப் போகிறேன்,” என்று பதிவிட்டிருக்கிறார்.
‘வாலு’ படத்தை வெளியிட விடாமல் சிலர் சதி செய்வதாக ஏற்கெனவே டி.ராஜேந்தர் சொல்லி அந்தப் படத்திற்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்போது ‘இது நம்ம ஆளு’ பட விவகாரத்தில் டிஆரின் இளைய மகன் குறளரசனுக்கும், படத்தின் இயக்குனர் பாண்டிராஜுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடமும் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.