வெற்றிவேல் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் கிராமத்துக் கதைகளே வரவில்லையே என்ற ஏக்கத்துடன் இருப்பவர்களுக்கு அந்த ஏக்கத்தைப் போக்கியிருக்கிறார் இந்த ‘வெற்றிவேல்’. கதைதான் கொஞ்சம் 90களின் வாசனை அடித்தாலும் அந்த மண்ணின் மணமும், கிராமத்துக் கதாபாத்திரங்களும் நம்மைக் கவர்ந்துவிடுகின்றன. தஞ்சைப் பின்னணியில் ஒரு குடும்பக் கதையை குடும்பத்துடன் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்தமணி. வாத்தியார் இளவரசு – ரேணுகா தம்பதியரின் மூத்த மகன் சசிகுமார். படிக்காமல் ஊரில் உரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த உரக் கடையை நடத்துவதற்கு விவசாயத்தில் டாக்டர் படிப்புப் படிக்கும் மியா ஜார்ஜ் மீதான காதல்தான் காரணமாக இருக்கிறது. சசிகுமாரின் தம்பி அனந்த் நாக், பக்கத்து ஊர் பெரிய மனிதரான பிரபுவின் மகள் வர்ஷாவைக் காதலிக்கிறார். காதலுக்கு எதிரியாக இருப்பவர் பிரபு. தம்பி காதலுக்காக ‘நாடோடிகள்’ கடத்தல் கும்பலுடன் வர்ஷாவைக் கடத்த திட்டமிடுகிறார் சசிகுமார். ஆனால், கூட்டத்தில் தவறுதலாக நிகிலா-வைக் கடத்தி விடுகிறார்கள். நிகிலாவுக்கு இரண்டு நாட்களில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில், மாப்பிள்ளை வீட்டாரான விஜி சந்திரசேகர் கொடுத்த சாபத்தால் நிகிலாவின் அப்பா தற்கொலை செய்து கொள்கிறார். தன்னால்தான் நிகிலாவுக்கு இந்த நிலை என அவரைத் திருமணம் செய்து கொள்கிறார் சசிகுமார். இதன் பின் சசிகுமார் – மியா ஜார்ஜ் காதல் என்ன ஆனது, சசிகுமாரின் தம்பியான அனந்த் நாக் – வர்ஷா காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக் கதை. சசிகுமாருக்கு இப்படிப்பட்ட கிராமத்துக் கதைகள் மட்டுமே பொருத்தமாக இருக்கின்றன. ‘தாரை தப்பட்டை’யில் இழந்த பெயரை இந்தப் படத்தி மீட்டு விடுகிறார். ஆனாலும், எதற்கு அறிமுகப் பாடல், அதற்கு ஒரு வராத நடனம் என முயற்சிக்கிறார் எனத் தெரியவில்லை. வழக்கம் போலவே மதுரை கலந்த தமிழை தஞ்சாவூரில் நடக்கும் கதையிலும் பேசுகிறார். இன்னும் எத்தனை படங்களில்தான் காதலர்களை சேர்த்து வைக்கப் போகிறாரோ தெரியவில்லை. கிராமத்துக் கதையிலேயே கொஞ்சம் ரூட்டை மாத்துங்க பாஸ்… மியா ஜார்க் கொஞ்சம் கரகரக் குரலில் மிரள வைத்தாலும் புடவையில் பாந்தமாக ரசிக்க வைக்கிறார். ஆனாலும், இடைவேளைக்குப் பிறகு அவரை அழ வைத்து அனுப்பி விடுகிறார்கள். நிகிலா, வர்ஷா இருவருமே பக்கத்து வீட்டுப் பெண்கள் போலவே இருக்கிறார்கள். சினிமாத்தனமில்லாத முகங்கள். நல்ல படங்கள், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் முன்னுக்கு வரலாம். தம்பி ராமையா காமெடி ஆபாசத்தின் உச்ச கட்டம். குடும்பத்துக் கதையில் இதை ஏன் நுழைத்தார்களோ ?. பிரபுவுக்கு வழக்கம் போல ‘கனமான’ கதாபாத்திரம். விஜி சந்திரசேகரின் உருட்டல் மிரட்டல் எல்லாம் 90களின் ஸ்டைல். மற்ற கதாபாத்திரங்களில் யதார்த்தமாக ஸ்கோர் செய்பவர் இளவரசு மட்டுமே. இமான் பாடல்களில் வழக்கம் போல இளையராஜாவின் தாக்கம் அதிகம். கதிரின் ஒளிப்பதிவு தஞ்சாவூர் பசுமையை குளிர்ச்சியாகக் காட்டுகிறது.  

Read Previous

என்னுள் ஆயிரம் – விமர்சனம்

Read Next

Theri – Jithu Jilladi – Official Video Song