‘இறைவி’ – தயாரிப்பாளருக்கு இரு மடங்கு செலவு வைத்த கார்த்திக் சுப்பராஜ்

‘இறைவி’ படம் வெளிவந்த இரண்டு நாளிலேயே பிரச்சனைகளை இழுத்துவிட்டது.

இப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்குனராக அறிமுகமான படம் ‘பீட்சா’. அந்தப் படத்தைத் தயாரித்து கார்த்திக் சுப்பராஜுக்கு இயக்குனராக வாழ்க்கையைக் கொடுத்தவர்தான் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

மீண்டும் ‘இறைவி’ படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார். முதல் படமான ‘பீட்சா’வை ஒரு சில கோடிகளில் முடித்துக் கொடுத்து கார்த்திக் சுப்புராஜ் ‘இறைவி’ படத்திற்கு சொன்ன பட்ஜெட் சுமார் 7 கோடி.

பொதுவாக சொன்ன பட்ஜெட்டை விட ஒரிரு கோடிகள் அதிகமானால் தயாரிப்பாளர் தாங்குவார். ஆனால், ‘இறைவி’ படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய இரண்டு மடங்காகி சுமார் 13.5 கோடி வரை சென்றுள்ளது.

இவ்வளவு தகவலையும் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவின் ஆடியோ பதிவு மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

‘இறைவி’ படம் லாபம் தந்தால் மட்டுமே தயாரிப்பாளர் சி.வி.குமார் தொடர்ந்து படமெடுக்க முடியும் என்றும் இல்லையென்றால் அவரால் தாங்க முடியாது என்றும் ஞானவேல் ராஜா வருத்தத்துடன் கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இரண்டாவது படமான  ‘ஜிகர்தண்டா’ படமும் அதிக செலவாகி அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனுக்கும், கார்த்திக்கும் பிரச்சனை ஏற்பட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

தனக்கு முதல் பட வாய்ப்பைக் கொடுத்து அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த தயாரிப்பாளருக்கு கார்த்திக் சுப்புராஜ் இப்படி படத்தின் பட்ஜெட்டை இருமடங்காக்கி இழுத்துவிட்டிருப்பது நியாயமா என்று தயாரிப்பாளர்கள் பலரும் தற்போது பேச ஆரம்பித்துள்ளார்கள்.

தயாரிப்பாளர்கள் தான் ஒரு திரைப்படம் உருவாக முழுமுதற் காரணம். தயாரிப்பாளர்களைக் காப்பாற்றிய இயக்குனர்கள்தான் முன்னணி இயக்குனராக உயர்ந்திருக்கிறார்கள்.

சினிமாவில் பெயரை விடவும் லாபம்தான் கவனத்தில் கொள்ளப்படும் என்பது கார்த்திக் சுப்பராஜுக்குத் தெரியாதா ?.

Read Previous

Kakakapo – Official Trailer

Read Next

இஷாரா மீது வழக்கு போடும் தயாரிப்பாளர்