16 நாட்களில் கலையரசன் நடித்து முடித்த ‘பட்டினப்பாக்கம்’

முள்ளமூட்டில் புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ரோகித் மேத்யூவ் தயாரிக்க அறிமுக இயக்குனர் ஜெயதேவ் இயக்கும் படம் ‘பட்டினப்பாக்கம்’.

“மெட்ராஸ், கபாலி’ படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கலையரசன் கதாநாயகனாகவும், ‘ஈகோ, யாமிருக்க பயமே’ திரைப்படங்களில் நடித்த அனஸ்வரா குமார் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாயா சிங், யோக் ஜபி, ஜான் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இஷான் தேவ் இசையமைக்க, ராணா ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ், மற்றும் மலையாளப் படங்களில் நாயகியாக நடித்துள்ள நடிகை பாவனாவின் தம்பிதான் இப்படத்தின் இயக்குனர் ஜெயதேவ். இயக்குனர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனர் ஜெயதேவ் கூறியதாவது,

“ பட்டப்படிப்பை முடித்த கதாநாயகனின் குடும்பம் ஏழ்மையில் தவிக்கிறது. குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தனாக விருப்பப்படும் நாயகன், குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்கத் திட்டம் தீட்டுகிறான். சிலரை குறிவைத்து தீட்டிய திட்டம் திசைமாறி எதிர்பாராவிதமாக நாயகனுக்கு பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. இந்த சிக்கலில் மாட்டியவர்களின் கதி என்ன, நாயகன் இந்த பிரச்சனையை எவ்வாறு சமாளித்து வெற்றி காண்கிறான் என்பதை விருவிருப்பான திரைக்கதையுடன் கூறும் படமே ‘பட்டினப்பாக்கம்’.

மலையாளத்தில் ஒரு படத்தைப் பார்க்க போக வேண்டும் என்றால் மிகவும் யோசித்துவிட்டுத்தான் போவார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படியில்லை, சினிமாவை மிகவும் ரசித்துப் பார்ப்பார்கள். அதனால்தான், இங்கு இயக்குனராக அறிமுகமாக அதிகம் ஆசைப்பட்டேன்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் 21 நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் நாயகனாக கலையரசனைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. சில கதாபாத்திரங்களை ஒரு சிலர் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும். அவர் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த கதாபாத்திரத்தை விட ‘மதயானைக் கூட்டம்’ படத்தில் நடித்ததைப் பார்த்துதான் இந்தப் படத்தில் அவரையே நாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்,” என்றார்.

கலையரசன் படம் பற்றிக் கூறும் போது,

“நான் நாயகனாக நடித்து வெளிவர இருக்கும் ஆறாவது படம் இது. இதுவரை எந்தத் தயாரிப்பாளரிடமும் எனது சம்பளத்தைப் பற்றி கறாராகப் பேசியது கிடையாது. பாக்கி பணம் கொடுத்தால்தான் டப்பிங் பேசுவேன் என்றெல்லாம் டிமான்ட் செய்யவே மாட்டேன்.

இந்தப் படத்திற்காக 16 நாட்கள் மட்டும்தான் நடித்தேன். அவ்வளவு சிறப்பாக படத்தைத் திட்டமிட்டு முடித்தார் இயக்குனர் ஜெயதேவ். நான்தான் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை வற்புறுத்தி நடிக்க வைத்தார்,” என்றார் கலையரசன்.

‘பட்டினப்பாக்கம்’ படத்தை S.P.சினிமாஸ் வெளியிட உள்ளது.

Read Previous

Parandhu Sella Vaa – Mann Meedhu – HD Lyric Video

Read Next

Bogan – Official Tamil Trailer