அம்மா பெயரை பட்டமாக வைத்துக் கொண்ட ‘கண்மணி ராகவா லாரன்ஸ்’

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டிலில் ராகவா லாரன்ஸ் பெயருடன் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் சேர்க்கப்பட்டிருந்தது.

இன்று காலை படம் வெளியான பிறகு சமூக வலைத்தளங்களில் அது பற்றி பரவிய செய்தி, கடும் சர்ச்சைகளை உருவாக்கியது. பலரும் ‘மக்கள்’ என்ற அடைமொழியுடன் மற்ற நடிகர்களின் பட்டப் பெயர்களைச் சேர்த்து விமர்சித்து வருகிறார்கள்.

பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் இந்த விவகாரம் குறித்து ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதாவது,

“இன்று வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் இயக்குனர் சாய்ரமணி சமீப காலமாகவே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தார். அது என்ன என்பது எனக்குத் தெரியாது.

ஆனால் இந்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் என் பெயருக்கு முன்னால் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்று பட்டதை வழங்கி இருக்கிறார். அதுதான் அந்த இன்ப அதிர்ச்சி.

அவர் அன்பிற்கு நன்றி. இருந்தாலும் எனக்கு எந்த ஒரு பட்டமும் வேண்டாம். எப்போதும் இந்த உலகத்தில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார், அது என் தலைவர் ரஜினிகாந்த் மட்டும் தான். அவர்தான் என் குரு, எனக்கு வழிகாட்டி எல்லாமே.

எனக்கு இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பட்டம் என் அம்மாவின் பெயர் தான். அதற்கு நிகராக வேறு எந்தப் பட்டமும் என்னை திருப்திப்படுத்தி விட முடியாது. அதனால் ‘கண்மணி’ என்ற என் அம்மாவின் பெயரை எனக்கு பட்டமாக நானே தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

அதனால் இனி என் பெயருக்கு முன்னால் பட்டமாக ‘கண்மணி’ ராகவா லாரன்ஸ் என்று வைத்துக்கொள்கிறேன்,” என்ற்ர் ராகவா லாரன்ஸ்.

Read Previous

Six directors praised Power Paandi album

Read Next

Kaatru Veliyidai Trailer