12 12 1950 – ஒரு ரஜினி ரசிகரின் கதை

ஜியோஸ்டார் நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிக்க கபாலி செல்வா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் 12-12-1950.

ஒரு ரஜினிகாந்த் ரசிகரைப் பற்றிய கதை என்பதால் படத்திற்கு ரஜினிகாந்தின் பிறந்த தேதியான 12-12-1950 என வைத்திருக்கிறார்கள்.

இயக்குனரும், நடிகருமான செல்வா இப்படத்தை கபாலி செல்வா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு இயக்கியுள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘கோல்மால்’ படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள படம் இது.

படம் பற்றி கபாலி செல்வா கூறியதாவது,

”இப்படத்தின் ட்ரைலரின் வெற்றி ரஜினி சாரின் புகழுக்கு மற்றுமொரு சான்றாகும். ‘பேர கேட்டவுடனே சும்மா அதிருதுல்ல’ என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது. அதற்காக அவரது ரசிகர்களுக்கு நன்றி . பல வருடங்களுக்கு முன்பே இந்த மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சமீபத்தில் தான் கதையை முடித்து கோட்டீஸ்வர ராஜு சாரிடம் சொன்னேன். கதையை கேட்டவுடன் அவரும் ஓகே சொன்னார்.

40 ஆண்டுகளாக நான் ரஜினி சார் ரசிகனாக இருந்து வருகிறேன். 28 வருடங்களுக்கு முன்பு கேஸினோ தியேட்டர் அருகில் ரஜினி சார் நடித்த ஒரு படத்தின் போஸ்டரை சிலர் கிழித்துக் கொண்டிருந்தார்கள். நான் கோபப்பட்டு அவர்களை அடித்து விட்டேன். அடி வாங்கிய அவர்கள் போய்விட்டு பின் பல பேரை அழைத்துக் கொண்டு என்னை அடிக்க வந்தார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து ஓடினேன். அந்த சம்பவம் இந்த படம் உருவாக ஒரு விதையாக அமைந்தது. அந்த சம்பவத்தையும் படத்தில் ஒரு காட்சியாக வைத்திருக்கிறேன்.

தம்பி ராமையா ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்து 9 கெட்டப்பில் நடித்தார். யாருமே சம்பளத்தை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் எனக்காக நடித்துக் கொடுத்தனர். அஜய், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், குமரவேல், ஆதவன் ஆகியோரும் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள்.

பிப்ரவரியில் கதை ஓகே ஆனவுடன் ரஜினி சாரிடம் போய் ஆசிர்வாதம் வாங்கினேன். வேர்ல்ட் ஆண்டி ஸ்மோக்கிங் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறேன். அதைப் பற்றி ரஜினி சாரிடமும் சொல்லி வாழ்த்து பெற்றேன். இந்த வருடம் ரஜினி பிறந்த நாளில் 1 லட்சம் குழந்தைகளிடம் எதிர்காலத்தில் புகை பிடிக்க மாட்டேன் என கையெழுத்து வாங்கிய பாண்ட் பத்திரங்களை அவரது பிறந்த நாள் பரிசாக ஒப்படைக்க உள்ளேன்

இதற்கு முன்பு கோல்மால் என்ற படத்தை இயக்கியிருக்கிறேன். அப்போது செல்வா என்ற பெயரில் தான் இயக்கினேன். ஒரு ரஜினி ரசிகனாக என் பெயருக்கு முன் ரஜினி சாரின் அடைமொழியை போட்டுக் கொள்ள விரும்பினேன். இந்தப் படத்தில் அதை போட்டுக் கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அது தான் கபாலி செல்வா என என் பெயர் மாறக் காரணம். இந்த கதைக்கு நாயகி தேவையில்லை என முடிவு செய்தேன். அதனால் நாயகி யாரும் படத்தில் இல்லை. ரஜினி ரசிகர்களுக்காக இந்த படம் எடுக்கவில்லை. எல்லா ரசிகர்களுக்காகவும் தான் இந்த படம். எல்லோரையும் படம் கவரும்,” என்றார் இயக்குனரும், ஹீரோவுமான கபாலி செல்வா.

விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

Read Previous

பிரசாத் அகாடமி பட்டமளிப்பு விழாவில் இயக்குனர் ஹன்சல் மேத்தா

Read Next

‘நான் திரும்ப வருவேன்’ – இலங்கைப் பிரச்சனை பற்றிய படம்