இளைஞர்களின் கரங்கள் விலகா போர் நிகழ வேண்டும் – பார்த்திபன்

மருத்துவம் படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த அரியலூரைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா, நீட் என்ற கிராமப்புற மக்களுக்கு எதிரான தகுதித் தேர்வினால் பாதிக்கப்பட்டு டாக்டருக்குப் படிக்க முடியாத சோகத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

தமிழக மக்களிடமும், திரையுலகத்தினரிடும் இந்த சம்பவம் பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

“அணி தாவும் அரசியல் ஆடுகள களேபரத்தில் …

அனிதாவும் இன்னும் பலியாகும் உயிர்களும் இனியும் ஆகும்.

இனியாவும் நலமாகுமென நம்பி அனிதாவின் குடும்பத்தார்க்கு வருத்தச் செய்தி மட்டும் வாசித்துவிட்டு நகர்தலும் வன்முறையே.

வாழவே துவங்காத ஒரு இளம் பெண் தன் இன்னுயிரை மாய்த்துக் கொ(ல்)ள்ளும் முன் என்னவெல்லாம் யோசித்திருக்கலாம் ?. அதில் NEET தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதே பிரதம கோரிக்கையாக இருந்திருக்க வேண்டும். அந்த நீள் கனவோடே அவரின் மீளா கண்ணடைத்தல் நிகழ்ந்திருத்தல் வேண்டும்.

ஏழைகளின் ஓலத்திற்கும் ஒப்பாரிக்கும் Gst போட்டு விசும்பலாக்க நடுவன் அரசு நன்கு அறிந்திருக்கிறது . தானே… செய்து கொண்டால்தானே அது தற்கொலை? ஒரு நாடே சேர்ந்து ஒருவரை கொலை செய்தால் அதெப்படி தற்கொலையாகும் ?.
நூறு உயிர்களையாவது காக்கவே ஒரு மருத்துவர்.

அம்மருத்துவரையே கொல்வது ? பெருந்துயர் ! இனி மறு துயர்- மறு தவற் நிகழுமுன் தடுக்க, இன்று கோர்க்கும் இளைஞர்களின் கரங்கள் விலகா போர் நிகழ வேண்டும்,” என பார்த்திபன் கூறியிருக்கிறார்.

Read Previous

ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும் – விஷால்

Read Next

அனிதா மறைவு – நடிகைகள் இரங்கல் செய்தி