உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளை பல தமிழ் அறிஞர்கள் முன்னெடுத்து செய்து வருகின்றனர்.
தமிழ் இருக்கை அமைவதற்கான மொத்த செலவான 39 கோடியில் இதுவரை 30 கோடி வரை வசூல் ஆகியுள்ளது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் அதற்காக 10 கோடி ரூபாயை வழங்க உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளரும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவருவமான நடிகர் விஷால் அவருடைய சொந்தப் பணத்திலிருந்து 10 லட்ச ரூபாயை இதற்காக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை என்பது நாம் கவலைப்பட வேண்டியது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றிகள்!
தமிழுக்கு அங்கே ஓர் இருக்கை அமைக்க சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் இதுவரை சுமார் 17 கோடி ரூபாய் தான் சேர்ந்துள்ளது. எனது சார்பில் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன். உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி விரைவில் சேர உதவ வேண்டும் என்றும் மத்திய அரசும் இந்த வரலாற்று சிறப்புக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமார் இதற்கு நன்கொடை அளித்துள்ளார். மேலும், சில நடிகர்களும் நன்கொடை அளித்துள்ளனர்.
ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களும், 100 கோடி ரூபாய், 400 கோடி ரூபாய் என பிரம்மாண்டமாகப் படங்களைத் தயாரிக்கும் சில நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும், வியாபார நிறுவனங்களும் நன்கொடை அளித்தால் விரைவில் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான மொத்த நன்கொடையும் வசூலாகிவிடும்.
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடை அளிப்பதற்கு இன்னும் 244 நாட்கள் அவகாசம் உள்ளது.
நன்கொடைகளை நேரடியாகச் செலுத்த http://harvardtamilchair.org என்ற இணையதளத்துக்குச் சென்று நன்கொடை அளியுங்கள்.