நகுல் நடிப்பில் உருவாகி வரும் ‘செய்’ படத்தில் இடம்பெறும் ‘இறைவா…’ என்ற சூஃபி பாடலை பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி பாடியுள்ளார். இவர் ஏற்கெனவே பல பாகிஸ்தானி பாடல்களையும், ஹிந்தி பாடல்களையும் பாடியிருக்கிறார். ராய் லக்ஷ்மி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஜூலி 2’ படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
பாகிஸ்தான் பாடகர் ஒருவர் தமிழில் பாடுவது இதுவே முதல் முறை என்பதை அறிந்த ஆதிஃப் அலி அதற்காக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இவருடன் இணைந்து ஹிந்துஸ்தானி பாடகரான சபதஸ்வரா ரிஷுவும் ‘இறைவா….’ பாடலை பாடியுள்ளார். கேட்டவுடன் அனைவருக்கும் பிடித்துப் போகும் பாடலாகவும், நீண்ட நாட்கள் ஒலிக்கும் பாடலாகவும் இந்த சூஃபி பாடல் இருக்குமென தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நிக்ஸ் லோபஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். மேலும் ‘செய்’ ஆல்பத்தில் பிரபல முன்னணி பாடகர்களான ஷங்கர் மகாதேவன், சோனு நிகம், ஷ்ரேயா கோஷல், பென்னி தயாள் மற்றும் அறிமுக பாடகி கீதாஞ்சலி ஆகியோர் பாடியுள்ளனர்.
‘ட்ரிப்பி டர்ட்டிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை மன்னு மற்றும் உமேஷ் இணைந்து தயாரித்துள்ளார்கள். டிசம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகவிருக்கிறது.