சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப், மெஹ்ரீன், விக்ராந்த், ஷாதிகா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.
இப்படத்தினைப் பற்றி பத்திரிகையாளர்கள், ரசிகர்கள், தியேட்டர்கள் தரப்பில் இருந்து சொன்ன கருததுக்களை வைத்து படத்தின் நீளத்தை 20 நிமிடம் வரை குறைத்திருக்கிறார்கள். அதோடு, நாயகியாக நடித்த மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்தையும் நீக்கியுள்ளார்கள்.
இது பற்றி இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது,
“நெஞ்சில் துணிவிருந்தால்’ திரை படத்தின் புதிய வெர்சன் இன்று நன்பகல் 12 மணி முதல் அனைத்து திரை அரங்குகளிலும் திரையிடப்பட்டு உள்ளது. சுமார் 20 நிமிடங்கள் வரை காட்சிகளை நீக்கியுள்ளோம். இடைவேளை வரை 55 நிமிடங்களும், இடைவேளைக்குப் பின் 50 நிமிடங்களும் படத்தின் நீளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது. நாங்கள் 15 நாட்கள் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். மெஹ்ரீன் நடித்த காட்சிகளை சூழ்நிலை காரணமாக நீக்கியுள்ளோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
படங்கள் திரைக்கு வந்து அதன் பின் நீளம் குறைக்கப்பட்ட படங்கள் சில உண்டு. “மெல்லத் திறந்தது கதவு, பன்னீர் புஷ்பங்கள், குஷி’’ ஆகிய படங்கள் அதற்கு உதாரணம். சில படங்களின் கதையை நாம் எழுதும் போதும் தெரியாது. எடுத்து முடித்த பிறகும் தெரியாது. ரசிகர்களுடன் படம் பார்க்கும் போதுதான் தெரியும். அப்படித்தான் இப்போது இப்படத்தின் நீளத்தை மாற்றியுள்ளோம்,” என்றார் இயக்குநர் சுசீந்திரன்.
ஒரு படம் வெளிவந்த பிறகு அந்தப் படத்தில் நடித்த நாயகி ஒருவரின் காட்சிகள் அனைத்தும் நீக்கப்படுவது இதுவே முதல் முறை.