கேணி விமர்சனம்

இந்தியத் திருநாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்சினையை தீர்க்காமல் மத்திய அரசே கண்டும் காணாமல் போய்க் கொண்டிருக்கிற காலத்தில் மனித நேயம் பற்றி பேசும் ஒரு படம் தான் ‘கேணி’.

மலையாளத்திலிருந்து வந்துள்ள எம்.எ.நிஷாத் ஒரு இயல்பான படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

கணவர் மறைந்ததால் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் ஜெயப்பிரதா. கேரளா, தமிழ்நாடு மாநில எல்லையில் அவருடைய வீடு உள்ளதால், வீடு தமிழ்நாட்டிலும், வீட்டிற்கான கிணறு கேரளாவிலும் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் ஊர் மக்களுக்கு நீர் ஆதாரமாக இருக்கும் அந்தக் கிணற்று நீரைப் பயன்படுத்த முடியாமல் சிக்கல் வருகிறது. அதைத் தீர்த்து அந்த ஊர் மக்கள் நன்றாக வழி ஜெயப்பிரதா எப்படி போராடுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

தமிழ் சினிமாவில் ‘அறம், அருவி’ படங்களின் வரிசையில் ‘கேணி’ படத்தையும் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

ஊர் மக்களுக்காக உழைக்கும் இந்திரா கதாபாத்திரத்தில் ஜெயப்பிரதா. இளமையான கதாநாயகியை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்காமல் ஒரு சீனியர் நடிகையை நடிக்க வைத்ததிலிருந்தே இந்தப் படம் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி இயக்குனர் தீர்க்கமான முடிவு எடுத்துள்ளார் என்பது தெரிகிறது. ஜெயப்பிரதாவின் அனுபவ நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது.

ஊர் தலைவர் பார்த்திபன், வக்கீல் நாசர், அரசு உயர் அதிகாரி ரேவதி, கிராமத்து அம்மா அனுஹாசன், நீதிபதி ரேகா, மந்திரி தலைவாசல் விஜய் என ஒவ்வொருவரையும் அவர்களுக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் ஆரம்பத்தில் அதிகமாக இருக்கும் மலையாள வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். ஜெயப்பிரதாவின் போராட்டத்தில் இன்னும் தீவிரத்தைக் காட்டியிருக்கலாம்.

உலகத்தில் உள்ள இயற்கை வளங்கள் அனைவருக்கும் உரித்தானவை என்பதை அழுத்தமாகப் பதிய வைக்கிறது இந்த ‘கேணி’.

 

Read Previous

கூட்டாளி விமர்சனம்

Read Next

எனக்கு ‘கரு’ மிக முக்கியமான படம் – இயக்குனர் விஜய்