கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியிருக்கும் படம் ‘எக்ஸ் வீடியோஸ்’.
கதையின் இயல்பு தன்மைக்காக முற்றிலும் புதுமுகங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்கியுள்ள சஜோ சுந்தர் இயக்குநர் ஹரியின் உதவி இயக்குநர். நடிகர் பிரகாஷ் ராஜ், ‘பொம்மரில்லு’ பாஸ்கர் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர்.
சென்னை, பெங்களூர், மும்பை போன்ற இடங்களில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது. தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது.
படத்தில் ஐடி துறையில் இருக்கும் இளைஞர்கள் ஜாலியாக பொழுது போக்காக த்ரில்லுக்காகச் செய்யும் செயல்கள் செல்லும் விபரீதமான பாதையை படம் எடுத்துக் காட்டி எச்சரிக்கிறது.
இப்படத்தைப் பார்த்த இந்தி இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி நல்லதொரு சமூகத்திற்கு தேவையான கருத்தை விதைத்துள்ளீர்கள் என படத்தை வெகுவாக பாராட்டியதோடு இயக்குநர் சஜோசுந்தரை வெல்டன் என வாழ்த்தியுள்ளார்.
சென்ஸார் போர்டு உறுப்பினரான நடிகை கௌதமி படம் பார்த்துவிட்டு இயக்குநர் சஜோ சுந்தரை அழைத்துப் பாராட்டியுள்ளார்.
படத்தில் புதுமுக நடிகர் அஜய்ராஜ், நிஜய், ஷான் தலைமைப் பாத்திரம் ஏற்றுள்ளனர். பிரபுஜித், விஷ்வந்த், அர்ஜுன், அபினவ் ஆகியோர் நெகடிவ் பாத்திரங்களில் வருகிறார்கள்.
நாயகியாக ஆக்ருதி சிங் நடித்துள்ளார். பல நடிகைகள் நடிக்க மறுத்து கடைசியாக இவர் தைரியமாக நடித்துள்ளார்.
‘எக்ஸ் வீடியோஸ்’ படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர் படத்தைப் பற்றி கூறியதாவது,
‘எக்ஸ் வீடியோஸ் என்பது முதலில் ஆபாச இணையதளம் என்று நினைத்து விட வேண்டாம். என் படத்தைப் பொறுத்தவரையில், ‘எக்ஸ் (X)’ என்பது தவறு (Wrong videos) என்று அர்த்தம் கொள்ளும் வகையில்தான் தலைப்பு வைத்துள்ளேன்.
இன்று திரையரங்கிற்கு பார்வையாளர்கள் வருவதே சிரமமாக இருக்கிறது. குறைந்தபட்ச ரசிகர்களை இழுக்கவாவது இந்தத் தலைப்பு உதவலாமே. கிளுகிளுப்பான எண்ணத்துடன் நுழைபவனுக்குக் கூட நல்ல பாடத்தைச் சொல்லி அனுப்பும் இந்தப் படம். இது இளைஞர்களுக்கான படம் அவர்களின் பாலியல் தொடர்பான உளவியல் சிக்கல், எதிர்காலம் பற்றிப் பேசும் படம். குறிப்பாக இளம் பெண்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம். படத்தின் தலைப்பைக் கண்டு தவறாகக் கணிப்பவர்கள் படம் பார்த்த பின் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்.
இது உலகெங்கும் பரவிக் கிடக்கும் ஆபாச இணைய தளங்கள் பற்றிப் பேசுகிற படம். அப்படிப்பட்ட இணையதளங்களின் பெயரில் உலகளாவிய மாஃபியா கும்பல் செய்யும் அநியாயங்களைச் சொல்கிற படம். ஒவ்வொரு தனி மனிதனின் சுதந்திரத்தில் ஊடுருவி அவனது நிம்மதியைக் குலைக்கும் ஆபத்தைச் சொல்கிற படம்.
காதலர்கள், கள்ளக் காதலர்கள், தம்பதிகள் தங்களுக்குள் உணர்ச்சி வேகத்தில் எடுத்துக் கொள்ளும் வீடியோக்கள் எந்த அளவுக்கு அபாயகரமானவை என்று படம் எச்சரிக்கிறது. இந்த படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவு தான் மறைத்து வைத்து காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளிஉலகத்துக்கு வந்தே தீரும். ஆபாச இணையதளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் உண்டாகும் சமூகச் சிக்கலையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் இப்படம் உருவாகியிருக்கிறது.
கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட சைபர் உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம் தான்.
நம் வீட்டில் குளியல் அறையிலோ படுக்கையறையிலோ நம் ஸ்மார்ட் போனை வைத்து விட்டால் போதும் அதிலுள்ள வசதி மூலம் எங்கிருந்தோ ஒருவன் உங்கள் கேமராவை இயக்க முடியும். படம் பிடிக்க முடியும். இந்த அதீத தொழில்நுட்ப பயங்கரம் யாருக்கும் தெரிவதில்லை. அப்படி ஒரு வலையுலக ஆபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘எக்ஸ் வீடியோஸ்”.
இந்த ஆபாச இணையதளங்களை வளைகுடா நாடுகளில் அனுமதிப்பதில்லை. நம் அருகில் உள்ள பாகிஸ்தானில் கூட தடை செய்து உள்ளனர். நம் நாட்டிலும் இதை ஒழித்துக் கட்டலாம். அதற்கான முன் முயற்சியை நான் தொடங்கி விட்டேன், அதற்கு உங்கள் ஆதரவு தேவை. இந்தப் படத்தைப் பெண்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பெண் பிரபலங்களுக்கான காட்சி ஒன்றையும் திரையரங்குகளில், முதல் காட்சியைப் பெண்களுக்கென்றும் திரையிட இருக்கிறோம்,” என்றார் .
இப்படம் மே மாதம் வெளியாகவுள்ளது.