செய்தியின் தலைப்பைப் பார்த்ததும் குழப்பம் வேண்டாம். ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்க உள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளார்.
அப்படத்தின் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் முதல் படம் இது.
சிவகார்த்திகேயன் ஜோடியாக முன்னணி ஹீரோயின்கள் தான் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். ‘வேலைக்காரன்’ படத்தில் நயன்தாரா, தற்போது தயாராகி வரும் ‘சீமராஜா’ படத்தில் சமந்தா, அடுத்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங்.
அதுதான் செய்தியின் தலைப்பும், “அன்று ஹன்சிகா, நேற்று நயன்தாரா, இன்று சமந்தா, நாளை ரகுல் ப்ரீத்”. படத்தை இயக்கப் போகும் இயக்குர் ரவிகுமாரின் முதல் படத்தின் பெயர் ‘இன்று நேற்று நாளை’ என்பதும் ஒரு காரணம்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மான் கராத்தே’ படத்தில் ஹன்சிகா நாயகியாக நடிக்க ஒப்பந்தமான போதே பலரும் பொறாமைப்பட்டார்கள். அது, நயன்தாரா, சமந்தா ஆகியோருடன் நடிக்கும் போதும் வந்தது. இப்போது ரகுல் ப்ரீத் அடுத்த பட ஜோடி என்றதும் அந்த பொறாமை இன்னும் அதிகமாகத்தான் செய்யும்.
ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார். 24 எஎம் ஸ்டுடியோஸ் சார்பா ஆர்.டி.ராஜா இப்படத்தைத் தயாரிக்கிறார்.
விரைவில் படப்பிடிப்பு பற்றிய விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.