‘குள்ளநரிக் கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீ பாலாஜி இயக்கியிருக்கும் படம். நாயகனாக மிதுன் மகேஷ்வரன், நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார்கள்.
தங்கள் கையில் கிடைத்த பல லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை ரூபாயாக மாற்ற முயல்கிறார்கள் நாயகன் மிதுன், அவருடைய நண்பன் அப்புக்குட்டி. தான் கடத்துவதற்காக வைத்திருந்த அந்தப் பணத்தை இன்ஸ்பெக்டர் அருள்தாசிடம் பறி கொடுத்த வில்லன், மீண்டும் கைப்பற்ற முயல்கிறார். யார் கையில் அந்தப் பணம் தங்கியது என்பதுதான் படத்தின் கதை.
‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் புது மாப்பிள்ளை கதாபாத்திரத்தில் ரசிகர்களைக் கவர்ந்த மிதுன், இந்தப் படத்தில் கதாநாயகனாக கவர முயற்சித்திருக்கிறார். கதாநாயகனாக வளர்ந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியிலேயே அதிகமாகவே நடித்திருக்கிறார். கதாநாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணனுக்கு அதிக வேலையில்லை.
அதிரடி இன்ஸ்பெக்டராக நடிப்பிலும் அதிரடி காட்டியிருக்கிறார் அருள்தாஸ். நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் அப்புக்குட்டி, நாயகியின் மாப்பிள்ளையாக நடித்திருக்கும் சாம்ஸ் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.
யாருக்கோ சொந்தமான பணப் பை, அதைச் சுற்றி நகரும் கதை என ஏற்கெனவே சில பல படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படத்தை நகைச்சுவைப் படமாகக் கொடுப்பதா, பரபரப்பான படமாகக் கொடுப்பதா என இயக்குனர் கொஞ்சம் குழம்பிப் போயிருக்கிறார். முழுவதுமாக நகைச்சுவையை மட்டுமே வைத்திருந்தாலே படம் சுவாரசியமாக இருந்திருக்கும்.