ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று வெளிவந்த ‘சர்கார்’ திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருட்களை தீயில் போடுவது போன்ற காட்சிகள், படத்தின் வில்லி வரலட்சுமியின் கதாபாத்திரத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமளவல்லி என வைத்திருப்பது, அரசுக்கு எதிரான சில வசனங்கள் ஆகியவற்றைக் கண்டித்து அதிமுக-வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ‘சர்கார்’ திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன்பாக அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி, அங்கிருந்த சர்கார் பட பேனர்களை கிழித்து எறிந்தனர்.
சென்னையில் பல தியேட்டர்களில் இருந்த ‘சர்கார்’ பேனர்களை போலீசாரே அகற்றிய சம்பவங்களும் நடந்தது. இருந்தாலும் திரைப்படக் காட்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது சம்பந்தமாக நேற்று மாலை வரை திரையுலகத்தில் இருந்து ஒருவர் கூட குரல் கொடுக்கவில்லை.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நேற்று மாலை இந்த போராட்டங்களைக் கண்டித்து ஒரு டிவீட் போட்டார்.
முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 8, 2018
நேற்று இரவு நேரத்தில் ‘சர்கார்’ படத்தின் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வீட்டிற்கு போலீஸ் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது வீட்டுக் கதவை பல முறை தட்டியதாகவும், ஆனால் தான் அந்த சமயத்தில் வீட்டில் இல்லை என்றும் அதன் பின் அவர்கள் சென்றுவிட்டதாகவும், முருகதாஸ் தெரிவித்துள்ளார். முருகதாஸை காவல் துறையினர் கைது செய்ய சென்றதாக நேற்று பரபரப்பான தகவல் பரவியது.
Police had come to my house late tonight and banged the door several times.Since I was not there they left the premises. Right now I was told there is no police outside my house.
— A.R.Murugadoss (@ARMurugadoss) November 8, 2018
நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால், ‘சர்கார்’ படத்திற்கான போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“முருகதாஸ் வீட்டில் போலீஸ் ? எதற்காக..? எந்த எதிர்பாராத சம்பவங்களும் நடக்காது என்று எதிர்பார்க்கிறேன். தணிக்கை சான்று பெற்று, அந்தக் கதையை மக்கள் ரசித்த படத்திற்கு, எதற்காக இந்த கூக்குரல், அழுகை,” என விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
Police in Dir Murugadoss s home????? For Wat?? Hoping and really hoping that nothin unforeseen happens. Once again. Censor has cleared the film and the content is watched by public.den why all this hue and cry.
— Vishal (@VishalKOfficial) November 8, 2018
‘சர்கார்’ படத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்து நள்ளிரவில் ரஜினிகாந்த் டிவீட் ஒன்றைப் போட்டுள்ளார்.
தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
— Rajinikanth (@rajinikanth) November 8, 2018
‘சர்கார்’ படத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் காட்சிகளை நீக்க படக்குழுவினர் சம்மதம் தெரிவித்துவிட்டதாக பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் நேற்றே அறிவித்திருந்தார்.
நேற்று பல ஊர்களில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இன்று ‘சர்கார்’ படம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் திரையிடப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.