ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்திய போது அவர்களுக்கு எதிராக முதன் முதலில் ஆயுதம் ஏந்திப் போராடிய பழங்குடி இன தலைவர் பிர்சா முண்டா.
தற்போதைய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள உலியந்து என்ற ஊரில் பிறந்தவர். ஆங்கிலேயர்களை எதிர்த்தும், உள்நாட்டு நிலப்பிரபுக்களை எதிர்த்தும் பழங்குடி இன மக்களைத் திரட்டி உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பதை முதன் முதலில் உருவாக்கிப் போராடியவர்.
ஆங்கிலேயே அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் 25வது வயதில் மரணமடைந்த ஒரு போராளி பிர்சா முண்டா.
அந்தப் போராளியின் கதையைப் படமாக்க இரண்டு தமிழ் இயக்குனர்கள் போட்டி போட இருக்கிறார்கள்.
“அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா” ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித், ‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார் இருவரும் பிர்சா முண்டா படத்தை இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கோபி நயினார், பிர்சா முண்டா படத்தை இயக்கப் போவதாகவும், அதற்காக இரண்டு வருடங்களாக பல்வேறு தரவுகளைத் திரட்டி திரைக்கதை எழுதியிருப்பதாகக் கூறியுள்ளார். பிர்சா முண்டா கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொன்டாவை நடிக்க வைக்க பேசப் போவதாகவும் சொல்லியிருந்தார்.
இப்போது பா.ரஞ்சித், பிர்சா முண்டா படம் பற்றிய அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார். ஆனால், ரஞ்சித் படத்தை ஹிந்தியில்தான் இயக்க உள்ளார்.
ஏற்கெனவே, பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ பட கதை விவகாரத்தில், அது தன்னுடைய ‘கருப்பர் நகரம்’ படத்தின் கதை என சர்ச்சை எழுப்பியவர் கோபி நயினார்.
இப்போது இருவரும் ஒரு போராளியின் கதையை இயக்கப் போட்டி போடுவது தமிழ்த் திரையுலகத்தில் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது.