விஜய், அஜித் இருவரும் ஹீரோக்களாக வளர்ந்து வந்த ஆரம்ப காலத்தில் அவர்களது ஜோடியாக நடித்தவர் சுவாதி.
விஜய் நடித்த ‘தேவா’ படத்தில் அறிமுகமானவர். அதன் பின் அவருடன் ‘வசந்த வாசல், செல்வா’ ஆகிய படங்களிலும் ஜோடியாக நடித்தவர். அஜித்துடன் ‘வான்மதி, உன்னைத் தேடி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
95ல் அறிமுகமாகி, 2000க்குள் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு படிப்பதற்காக ஹைதராபாத் சென்று விட்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீரின் இயக்கத்தில் வெளியான ‘யோகி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் ஆர்வமாக உள்ளாராம்.
“நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்போது நடிக்க வருவீர்கள் என்று ஆவலுடன் கேட்கிறார்கள். ‘மேக்கப்’ இல்லாமல் சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.
இத்தனை வருடம் கழித்தும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார்கள். அப்படி ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பிலிருந்து தான் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்தாரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள்.
நான் அவ்வப்போது படங்களைப் பார்த்து வருகிறேன். முன்பைவிட இப்போதுள்ள சினிமா தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ‘பாகுபலி’ போன்ற படங்கள் உலகளவில் பேசப்பட்டது. பல தொலைக்காட்சி சேனல்கள் வந்தாலும் சினிமா என்றும் அழியாமல் நிரந்தரமாக இருக்கும்.
சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்,” என்கிறார் சுவாதி.
இப்போது டாப் ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித், தங்கள் ஆரம்ப கால நாயகிக்கு தங்களது படங்களில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பை இப்போது வழங்குவார்களா….?.