டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், சுமன், ராஜ் அருண், நீரவ் ஷா மற்றும் பலர் நடிக்கும் படம் வாட்ச்மேன்.
ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் இப்படம் பற்றி தன் அனுபவங்களை ஜி.வி.பிரகாஷ்குமார் கூறினார்.
“விஜய் தான் என்னை திரையில் முதன் முதலாக தோன்ற வைத்தவர். தலைவா படத்தில் தளபதியுடன் ஒரு பாடலில் ஆட வைத்தார். நாச்சியார் படத்தில் என் நடிப்பை பார்த்துதான் இந்த படத்தில் நடிக்கக் கேட்டார். அவர் இயக்கத்தில் நான் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. வாட்ச்மேன் படம் காமெடியுடன் கூடிய திரில்லர். தண்ணீர் கேன் போடும் பையனான நான் இரவில் ஒரு வீட்டுக்குள் போகிறேன். அந்த பங்களாவில் இருப்பவர்கள், நடக்கும் சம்பவங்களை கொண்டு படம் நகரும். புருனோ என்ற நாய் படம் முழுக்க வரும். அது செய்யும் சாகசங்கள் பிரமிக்க வைக்கும்.
நாய்க்கு பயப்படும் ஒருவன் நாயுடனே இரவு முழுக்க இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான். அந்த நாய் அவனைக் காப்பாற்றத்தான் முயற்சி செய்கிறது. ஆனால் அவனோ அந்த நாயை பார்த்து மிரள்கிறான். இப்படித்தான் கதை போகும். என்னைக் காப்பாற்ற நாய் செய்யும் செயல்களை குழந்தைகள் கைதட்டி ரசிப்பார்கள். அந்த நாயுடன் சுமார் 40 நாட்கள் நடித்தேன். நாய் குழந்தைகள் போலத்தான். அவற்றை அதட்டி மிரட்டி வேலை வாங்க முடியாது. அவற்றின் போக்கில் சென்றுதான் படம் பிடிக்க வேண்டும். புருனோவை நண்பனாக்கிக் கொண்டேன். இருந்தாலும் சில சமயம் முறைக்கும், பயமாக இருக்கும்.
இது ஹாலிவுட் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படம். இதில் பாடல்கள் வைத்தால் ரசிகர்கள் இருக்கையில் நெளியத் தொடங்கி விடுவார்கள். எனவே இப்படத்தில் பாடல்கள் வைக்கவில்லை. ஒரு விளம்பர பாடல் எடுத்துள்ளோம். இதில் நான், யோகி பாபு, சாயிஷா மூவரும் நடனம் ஆடியுள்ளோம்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் வெளிநாடுகளில் படித்து தொழிலதிபராக இருந்தவர். வெறும் லாப நோக்கத்தோடு மட்டும் சினிமாவுக்கு வராமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று குறிக்கோள் கொண்டவர். படத்தின் விளம்பரத்துக்காக செய்யும் செலவை நல்ல நோக்கத்தோடு மக்களுக்கு பயன்படும் வகையில் செய்யவேண்டும் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.
சமீபத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பொள்ளாச்சியில் இனி அதுபோன்ற சம்பவங்களோ குற்றங்களோ நடக்காத வகையில் கேமராக்கள் பொருத்துகிறார். இது மட்டும் அல்லாமல் கோடைகாலம் என்பதால் ஆங்காங்கே வெயிலில் தவிக்கும் சிறு வியாபாரிகளுக்கு நிழற்குடைகள் அமைப்பது, வாட்ச்மேன்களுக்கு குடை, தொப்பி வினியோகம் என்று நலத்திட்டங்களோடு சேர்ந்த விளம்பரம் செய்கிறார். அவருக்கு என் பாராட்டுகள்.
குழந்தைகள் நம்மை ரசிக்கிறார்கள் என்பதை பொது இடங்களுக்கு செல்லும்போது இதை உணர்கிறேன். அது பத்து ஹிட் படங்கள் கொடுத்த மகிழ்ச்சியைத் தருகிறது. குழந்தைகள் மட்டும் அல்லாமல் குடும்ப ரசிகர்களும் எனக்கு உருவாகி இருக்கிறார்கள். எங்க வீட்டு பையன் மாதிரியே இருக்கேப்பா… என்று சொல்லும்போது உலகிலேயே மகிழ்ச்சியான நபராக உணர்கிறேன்.
குழந்தைகள் மனதை கவர்வது எளிதான காரியம் அல்ல. அது குறைந்த காலகட்டத்திலேயே எனக்குக் கிடைத்திருப்பது கடவுளின் வரம் தான்,” என்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.