தெலுங்கு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பானுஸ்ரீ. ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார்.
தமிழில் அறிமுகமாவது பற்றி பானுஸ்ரீ கூறுகையில்,
“இந்த படத்தில் நான் ஜெய்யின் காதலியாக நடிக்கிறேன், அவரது அப்பாவித்தனத்தால் அவர் மீது காதல் வயப்பட்டு, பின் அவரை திருமணம் செய்து கொண்டு, ஈகோ மற்றும் பிடிவாதத்தால் பிரிந்து விடும் கதாபாத்திரம். ஆரம்பத்தில், நான் துடுக்குத்தனமான மற்றும் உற்சாகமான ஒரு பெண்ணாக இருப்பேன். திருமணத்திற்கு பிறகு கலாச்சாரத்துடன் ஒன்றி வாழும் அமைதியான பெண்ணாக மாறி விடுவேன்.
சமூகத்தின் நலனுக்காக சூப்பர் ஹீரோவாக மாறும் ஒரு சாதாரண மனிதனை சுற்றி நிகழும் ஒரு ஃபேண்டஸி ஆக்ஷன் படம்தான் ‘பிரேக்கிங் நியூஸ்’. இது வெறுமனே கிராஃபிக்ஸ் வைத்து உருவாகும் படம் அல்ல, நல்ல எமோஷனை உள்ளடக்கிய படம், நல்ல கருத்துக்களையும் கொண்டுள்ளது.
ஜெய் மிகவும் எளிமையாக இருக்கிறார். உடன் நடிப்பவர்களுக்கு மிகவும் உதவியாகவும் ஆதரவாகவும் இருக்கிறார். இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் தெளிவான ஒரு மனிதர். கதையில் என்ன சொன்னாரோ அதை எடுக்கிறார்,” என்றார்.
பானுஸ்ரீ ஏற்கனவே 15 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டார். அடுத்து சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
நாகர்கோவில் சார்ந்த திருக்கடல் உதயம் தயாரிக்கும் இந்த படத்தில் உலக அளவில் 450CG தொழில்நுட்ப வல்லுனர்கள் வி. தினேஷ்குமார் மேற்பார்வையில் Vfx பணிகளை செய்து வருகிறார்கள். படத்தில் 90 நிமிடம் அளவிலான CG காட்சிகள் இருக்கின்றன. ஜானிலால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பை கையாள்கிறார்.