ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில், ராஜு முருகன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ஜீவா, நடாஷா சிங், சன்னி வேய்ன், லால் ஜோஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் ஜிப்ஸி.
இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர், திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.
மலையாள இயக்குநர் லால்ஜோஸ் பேசும்போது,
“முதலில் என்னை நடிக்க அழைத்தார்கள். நான் ஆள்மாத்தி என்னை அழைத்து விட்டார்கள் என்று நினைத்தேன். சென்னைதான் என்னை இயக்குநர் ஆக்கியது. இந்தப்படத்தில் சின்ன ரோல் தான் என்று நினைத்தேன். ஆனால் பெரிய ரோல். ஸ்பாட்டில் நடிகராக இருக்கும் போது பெரிய பதட்டம். படிச்ச டயலாக்ஸ் எல்லாம் மறந்து போனது. சூட்டிங் முடிந்த போது இனி நான் தப்பித்தேன் என்று நினைத்தேன். ஆனால் டப்பிங்கும் நான்தான் பேசணும் என்றார்கள். பேசி இருக்கிறேன். இந்த ஜிப்ஸி ஒரு அபூர்வ சினிமா. பெரிய இயக்குநர்களின் பெயரைப் பார்த்து தான் நாங்கள் படம் பார்ப்போம். அதேபோல் வருங்கால சந்ததியினர் ராஜு முருகன் பெயரைத் தேடுவார்கள்,” என்றார்.
பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது,
“ஜீவா எத்தனையோ படங்கள் நடித்திருக்கிறார். ஆனால் இதுதான் அவர் பெயருக்கான படம். என் தம்பி ராஜு முருகனுக்கு அண்ணனாக நன்றிச் சொல்லிக்கொள்கிறேன். அவன் தேசியவிருது வாங்கி இருக்கிறான். வாங்க இருக்கிறான். அதைவிட எல்லாம் பெருமை இந்தப்படத்தில் பாந்த்சிங் போன்றவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறான். அதுதான் பெருமை. நான் சந்தோஷ் நாராயணன் சாரின் பெரிய ரசிகர். இந்தப்படத்தின் காரணி அம்பேத்குமார். அவர் இனிஷியல் S. அவர் எதற்குமே நோ சொன்னதே கிடையாது. தேனிசை செல்லப்பா பற்றி இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. ஈழத்தில் நடந்த கொடுமைகளைச் உலகுக்கு சொல்ல பாடல்கள் மூலமாக நிதி திரட்டியவர். இந்த ஜிப்ஸி மிகப்பெரிய வெற்றியை அடையும்,” என்றார்
இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது,
“முதல்முறையாக என் ஸ்டுடியோவில் குக்கூ படத்தின் இசைப்பதிவு தான் நடந்தது. ராஜுமுருகன் ஒரு மாமனிதன். இந்தப்படத்திற்கு ஜிப்ஸி என்ற பெயரைக் கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏன்னா எல்லா கலைஞர்களும் ஒரு ஜிப்ஸியாக இருக்க ஆசைப்படுவார்கள். அந்த அனுபவத்தை மொத்தமாக கொடுத்த ராஜு முருகன் அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் அம்பேத்குமார் இதுவரை எங்கள் வேலைகளில் தலையிட்டதே இல்லை. எல்லாவிதமான கல்ச்சர் உள்ள மக்களுக்கும் கர்நாடக இசையைக் கொண்டு சேர்க்கும் டி.எம் கிருஷ்ணா இந்தப்படத்தில் பாடி இருக்கிறார். இந்தப்படத்தில் பாடகர்கள் உள்பட 200 இசை கலைஞர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த ஜெனரேஷனின் பெஸ்ட் ரைட்டராக அறிவு அவர்களைப் பார்க்கிறேன். அவர் எழுதிய பாடல் எனக்குப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. ஜீவா உள்பட எல்லோரும் பயங்கரமாக உழைச்சிருக்காங்க. இந்தப்படம் உணர்வு ரீதியாகவும் டெக்னிக்கலாகவும் சிறப்பாக வந்திருக்கிறது,” என்றார்
தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசும்போது,
“ஒலிம்பியா மூவிஸின் ஜிப்ஸி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. நானும் ராஜு முருகனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னபட்ஜெட் படம் ஒன்று பண்ணலாம் என்று பேசினோம். யுகபாரதி வீட்டில் இருந்து யாரை ஹீரோவாகப் போடலாம் என்று பேசினோம். யுகபாரதி ஜீவாவைச் சொல்லவும் உடனே முடிவு செய்தோம். அதன் பின் இந்தப்படம் பெரியபடமாக வளரத் துவங்கியது. எனக்கு எல்லாத் தரப்பிலும் நண்பர்கள் உதவி வருகிறார்கள். அவர்களுக்கும் என் குடும்பத்திற்கும் நன்றி,” என்றார்
நடிகர் ஜீவா பேசும்போது,
“ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போலத்தான். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி ஆனேன். ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்னைக்கு நாம போன், நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். இந்தப்படத்திற்கு நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும். ராஜு முருகன் ஒரு கம்யூனிஸ்ட். இந்தமாதிரியான ஆடியோ லாஞ்ச்கள்தான் நிறைய நடக்க வேண்டும். பாந்த்சிங் போன்றவர்களை அறிமுகப்படுத்திய இந்த மேடை மிகச்சிறப்பான மேடை. இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே உண்மையாக உழைத்திருக்கிறார்கள். எனக்கு நல்ல ஒரு ஆல்பத்தை இந்தப்படம் மூலம் தந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு நன்றி,” என்றார்
—