கதை
தமிழ்நாட்டில் உதவி போலீஷ் கமிஷனர் ஆக இருக்கும் ஷாம், மற்றும் சைபர் கிரைம் அதிகாரியாக இருக்கும் ஸ்ரீநாத் இருவரும் அமெரிக்கா போலீசிடம் பயிற்சி பெறுவதற்காகச் செல்கிறார்கள். அங்கு சில பெண்களைக் கடத்தி யாரோ ஒருவர் கொலையும் செய்கிறார். ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணையும் கடத்துகிறார் அந்த ஆள். அவன் எதற்காகக் கடத்துகிறான், ஏன் கொலை செய்கிறான் என்பதை அமெரிக்கா போலீசை முந்திக் கொண்டு தமிழ்நாடு போலீஷ் அதிகாரியான ஷாம் கண்டுபிடிக்கிறார். அதுதான் படத்தின் கதை.
நடிப்பு
படத்தில் சில கதாபாத்திரங்களே இருக்கின்றன. நாயகன் ஷாம், அவருடன் ஸ்ரீநாத், நாயகி ஸ்ரீதேவி குமார், ஆத்மிகா, அமெரிக்கா வில்லன் ஆகியோர்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். தமிழ்நாடு போலீஸ் அதிகாரியாக, காக்கிச் சட்டையில் இல்லாமல் அமெரிக்காவில் சாதாரண உடையில்தான் பயிற்சி எடுக்கிறார் ஷாம். அவருக்கு வேறு யாரோ பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்கள். முடிந்த வரையில் காவல் துறையின் மிடுக்கைக் காட்டி நடித்திருக்கிறார்.
சைபர் கிரைம் அதிகாரி ஸ்ரீநாத், லொட லொடவெனப் பேசி எரிச்சலூட்டுகிறார். ஷாமின் முன்னாள் காதலியாக ஸ்ரீதேவி குமார். அமெரிக்கா போலீஸ் துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லனிடம் மாட்டிக் கொள்ளும் இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக ஆத்மிகா. கார் டிக்கிக்குள்ளேயே இருந்து கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அமெரிக்க வில்லன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இசை, மற்றவை
ராஜேஷ்குமார் ஒளிப்பதிவில் அமெரிக்கா ஹைவே சாலைகளின் அழகு, இந்த த்ரில்லர் கதையில் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்யாம் மோகன் பின்னணி இசையும் பரபரப்பைக் கூட்டுகிறது.
+
அமெரிக்காவில் நடக்கும் கதை என்பதால் விஷுவலாக வித்தியாசமாக உள்ளது.
–
படத்தின் தமிழ் சப்-டைட்டில்களில் நிறைய எழுத்துப் பிழை. திரைக்கதையில் இன்னும் பரபரப்பைக் கூட்டியிருக்கலாம். ஸ்ரீநாத்தின் நகைச்சுவை.