மருத்துவ முறைகேட்டைச் சொல்லும் ‘பேட்டரி’

ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் ‘பேட்டரி’.

மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, ‘அசுரன்’ படத்தில் தனுஷ் காதலியாக நடித்த அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார்.

இப்படம் பற்றி இயக்குநர் மணிபாரதி கூறியதாவது…

“பொதுவாகவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் கதையும் பரபரப்பாக அமைக்கப்பட்டுள்ளது. உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன்.

இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்குக் கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட மருத்துவ துறையிலேயே முறைகேடு நடந்தால் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள். அப்படி மருத்துவத் துறையில் நடக்கும் முறைகேட்டால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப் படுகிறது என்பதை நெஞ்சம் பதைபதைக்க வைக்கும் காட்சிகளாக படமாக்கியுள்ளோம்,” என்கிறார்.

இயக்குநர் மணிபாரதி பிரபல இயக்குநர்கள் வஸந்த், மணிரத்னம் , சரண் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இயக்குநர் லிங்குசாமி, ஹரி ஆகியோரின் கதை விவாதங்களில் பங்காற்றி வருபவர்.

இப்படத்தில் செங்குட்டுவன் சப் இன்ஸ்பெக்டராக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நாயகனுக்கு இணையானதாக நாயகி பாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

‘கைதி’ படத்தில் மக்களிடம் கைதட்டல் பெற்ற ஜார்ஜ் மரியான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ராஜ்குமார், நாகேந்திர பிரசாத், கிருஷ்ணகுமார், அபிஷேக் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

பூஜையுடன் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது. படம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

Read Previous

சில்லுக்கருப்பட்டி – டிரைலர்

Read Next

தமிழ் சினிமா – இன்று டிசம்பர் 20, 2019 வெளியான படங்கள்