‘சப்த சாகரதாச்சே எல்லோ’, ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’ பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் தேவ் ராம்நாத், விநாயக் வைத்யநாதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருனி சினி கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சாய் கிருஷ்ணா கட்வால் இணைந்து தயாரிக்கிறார்.
ருக்மிணி வசந்த் ஏற்று நடிக்கும் ‘தாரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
காலப்பயணத்தை மையமாகக் கொண்டு உருவான ‘கணம்’ திரைப்படத்திற்குப் பிறகு ஸ்ரீ கார்த்திக் இயக்கும் இப்படம், ருக்மிணி வசந்த் மற்றும் ஸ்ரீ கார்த்திக் இணையும் முதல் படமாகும்.
மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், கடந்த 18 மாதங்களில் எதிர்கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இன்ஸ்டாகிராமில் ஒன்பது அத்தியாயங்களைக் கொண்ட கற்பனை கலந்த ஆவணத் தொடரை வெளியிட்டுள்ளது. அதன் இறுதி அத்தியாயத்தில் ருக்மிணி வசந்த் ‘தாரா’ கதாபாத்திரத்தில் நடிப்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவ் ராம்நாத் மற்றும் ஸ்ரீ கார்த்திக் தொடங்கிய மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ‘ஐ ஹேட் யூ – ஐ லவ் யூ’ இணையத் தொடர் மற்றும் விருதுகளைப் பெற்ற ‘சைல்ட்ஹுட் டைரீஸ்’ குறும்படம் ஆகியவற்றை உருவாக்கியுள்ளது. சிருனி சினி கார்ப்பரேஷன் தயாரிப்பில் வெளியான ‘சி லா சோ’ திரைப்படம் சிறந்த அசல் திரைக்கதைக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.
இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர விவரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.