– இயக்குநர் யுவராஜ் சின்னசாமி
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘ஹைக்கூ’. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படம் குறித்து இயக்குநர் யுவராஜ் சின்னசாமி கூறுகையில், “எல்லா வயதினரும் ரசிக்கக்கூடிய காதல் கதையைச் சொல்ல வேண்டும் என்பதே ‘ஹைக்கூ’ உருவாக்கத்தின்போது எனது விருப்பமாக இருந்தது. தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் கதையின் மீது நம்பிக்கை வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.
ஏகன் கதாபாத்திரம் ஒரு பெண்ணின் காதலைப் பெற முயற்சிக்கும் காதலனாக மட்டுமல்லாமல், எதிர்பாராத விதமாக அவர் செய்யும் ஒரு செயல் அவரது வாழ்க்கையையே மாற்றுகிறது. அதன்பிறகு அவர் எதிர்கொள்ளும் உணர்வுப்பூர்வமான போராட்டங்கள் கதைக்கு வலுசேர்க்கின்றன. ரசிகர்கள் ஏகன் கதாபாத்திரத்துடன் தங்களைப் பொருத்திப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகிய மூவருக்கும் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் சவாலான கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. மூவரும் தங்களது கதாபாத்திரங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். ‘ஹைக்கூ’ இதயத்தை வருடும் பொழுதுபோக்குத் திரைப்படம். இந்தக் காதல் கதையை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள்,” என்றார்.
டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோரின் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதிர்ச்சி அருண், சுப்பிரமணியன் சேது, அதியமான், மைம் கோபி, இந்துமதி மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.