முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), தனது முதல் திரைப்படமாக ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தைத் தயாரித்துள்ளது.
கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்நாடு முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ், மகாவீர் அசோக் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில், மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடித்துள்ளார். மேலும், கே.எஸ். ரவிகுமார், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், சித்தப்பு சரவணன், விநோதினி வைத்தியநாதன், லொள்ளு சபா மனோகரன், மோனிஷா பிளஸ்ஸி, வாட்ஸப் மணி, நக்கலைட்ஸ் ரஞ்சித் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குநரும் நாயகனுமான கிஷோர் ராஜ்குமார் கூறுகையில், “வெறும் 29 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளோம். உடல் எடை அதிகமான ஒருவரை நாயகனாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் நானே நடித்திருப்பது மகிழ்ச்சி. காதலும் நகைச்சுவையும் நிறைந்த இந்தப் படம், தொடக்கம் முதல் இறுதிவரை ரசிகர்களைச் சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியுள்ளது. குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் ஃபீல் குட் திரைப்படமாக இது இருக்கும்.
ஜோடிப் பொருத்தத்தை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் நாயகிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. திறமையான நடிகையான அன்னா பென்னுடன் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கிய நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி,” என்றார்.
இப்படத்திற்கு பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், இணை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பை ராம் பாண்டியன் மேற்கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான ‘நாய் சேகர்’ படத்திலும் பணியாற்றியுள்ளனர். ஒரு பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்ரீ சசிகுமார் கவனிக்க, ஆடை வடிவமைப்பை கிருத்திகா சேகர் மேற்கொண்டுள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளர்களாக எஸ். என். அஸ்ரப் மற்றும் நரேஷ் தினகரன் பணியாற்றியுள்ளனர்.