சாமானிய மனிதன் செய்யாத குற்றத்திற்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் சிக்கி, பின்னர் நீதிமன்றத்தின் மூலம் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டாலும், அவன் மீது விழுந்த பழிக்கு என்ன விலை? அந்த பழியால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? இதுபோன்ற கேள்விகளை ஒரு பதக்கத்தை மையமாக வைத்து, சட்டம், நீதித்துறை மற்றும் அரசு நிர்வாகத்தை நோக்கி முன்வைக்கும் திரைப்படம் தான் ‘என்ன விலை’.
ராமேஸ்வரம் தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது மக்கள் தண்ணீரில் போடும் காசுகளை கடலுக்குள் மூழ்கி எடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார் கருணாஸ். அப்படி ஒரு நாள் கடலுக்குள் மூழ்கும் போது, அவருக்கு ஒரு பதக்கம் கிடைக்கிறது. அதை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடலாம் என்று கருணாஸ் முடிவு செய்ய, அந்த முடிவே அவரை எதிர்பாராத பிரச்சனைகளுக்குள் சிக்க வைக்கிறது.
கருணாஸிடம் இருக்கும் பதக்கத்தை அபகரிக்க நினைக்கும் சில காவலர்கள், அது முடியாமல் போக, தங்களை காப்பாற்றிக்கொள்ள அவரை கோவில் நகை கொள்ளை வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அது கோவில் நகை அல்ல என்பது தெரியவர, வேறு ஒரு திருட்டு வழக்கில் அவரை குற்றவாளியாக்கி சிறையில் அடைக்கிறார்கள்.
எந்த குற்றமும் செய்யாத கருணாஸை சிறையில் இருந்து மீட்க சட்டப்போராட்டம் நடத்துகிறார் வழக்கறிஞராக நடித்திருக்கும் நிமிஷா சஜயன். அவரது வாதத்திறமையால் கருணாஸ் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கும் அவர், குற்றம் செய்யாமல் தண்டனை அனுபவித்த ஒரு சாமானியனின் குரலாக, இதுவரை நீதித்துறையிடம் முன்வைக்கப்படாத ஒரு முக்கியமான கேள்வியை நீதிமன்றத்தில் எழுப்புகிறார்.
அந்த கேள்வி நீதிபதியையே அதிர்ச்சிக்குள்ளாக்க, கருணாஸ் அனுபவித்த பாதிப்புக்காக பணத்தால் மட்டும் அளவிட முடியாத ஒரு வித்தியாசமான இழப்பீட்டையும் நிமிஷா சஜயன் கேட்கிறார். அரசுக்கு எதிரானதாக இருக்கும் அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான சாத்தியம் இல்லை என்றாலும், அந்த கேள்வியும், இழப்பீடு குறித்த கோரிக்கையும் மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அரசு நிர்வாகத்திடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
சாமானியன் கருணாஸ் கேட்ட அந்த கேள்வி என்ன? அவருக்காக வழக்கறிஞர் நிமிஷா சஜயன் கேட்ட இழப்பீடு என்ன? அந்த கேள்வி எப்படி அரசுத் துறைகளை சிந்திக்க வைக்கிறது? என்பதற்கான பதில்களை சட்டப்போராட்டம் மற்றும் நீதிமன்ற வாதங்களின் வழியாக சொல்வது தான் ‘என்ன விலை’.
எந்த தவறும் செய்யாத சாமானியர்கள் சட்டத்தின் மூலம் குற்றவாளிகளாக்கப்பட்டு தண்டிக்கப்படுவதும், பின்னர் அதே சட்டத்தை பயன்படுத்தி போராடி தங்களை நிரபராதி என்று நிரூபிப்பதும் புதிதல்ல. ஆனால், அப்படி நிரபராதி என்று நிரூபிக்கப்பட்ட பிறகும், ஒருவர் மீது சுமத்தப்பட்ட வீண் பழி ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு என்ற கேள்வியை மையமாக வைத்து இயக்குநர் சஜீவ் பழவூர் உருவாக்கியிருக்கும் திரைக்கதை கவனம் பெறுகிறது.
கதையின் நாயகனாக தவசிமுத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாஸ், தனது இயல்பான நடிப்பு மற்றும் உடல்மொழி மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். குடும்பத்திற்காக கடுமையாக உழைக்கும் ஒரு சாதாரண மனிதன் மீது விழும் பழி, அவரது வாழ்க்கையையும் மனநிலையையும் எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை தனது நடிப்பின் மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, உணர்வுப்பூர்வமான காட்சிகளில் கருணாஸின் அளவான நடிப்பு பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறது.
வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிமிஷா சஜயன், சொந்தமாக டப்பிங் பேசி நடித்திருப்பது கதாபாத்திரத்திற்கு இயல்புத்தன்மையை கொடுத்திருக்கிறது. குறிப்பாக நீதிமன்றக் காட்சிகளில் உணர்வுப்பூர்வமான வசனங்களை அழுத்தமாக பேசி நடித்திருக்கும் அவர், தனது வாதத்திறமை மூலம் அந்த காட்சிகளுக்கு சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்.
கருணாஸின் மனைவியாக நடித்திருக்கும் விஜயலக்ஷ்மி வீரமணி, தங்கையாக நடித்திருக்கும் சாஷா ஆகியோர் இயல்பான தோற்றம் மற்றும் நடிப்பு மூலம் கதையின் உணர்வுப்பூர்வமான பகுதிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
வழக்கறிஞர்களாக நடித்திருக்கும் சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணன், நீதிபதிகளாக நடித்திருக்கும் நிழல்கல் ரவி, பூர்ணிமா பாக்யராஜ், டி.எஸ்.ஆர். ஸ்ரீனிவாசன், காவலர்களாக நடித்திருக்கும் மோகன் ராம், தர்ஷன் உள்ளிட்ட பலரும் குறைவான காட்சிகளில் தோன்றினாலும், திரைக்கதையின் போக்கில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாக பயணித்து தங்கள் இருப்பை பதிவு செய்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி, இயற்கையான ஒளியை அதிகம் பயன்படுத்தி கதைக்களத்தின் இயல்புத்தன்மை மாறாமல் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். நாயகன் யார், அவரது தொழில் என்ன, அந்த தொழிலில் இருக்கும் ஆபத்து என்ன என்பதை விளக்கும் தொடக்கக்கட்ட காட்சிகள் கோப்புக் காட்சிகளைப் போல் இருந்தாலும், அவற்றை கையாண்ட விதம் கவனம் பெறுகிறது. அதேபோல், நீதிமன்றக் காட்சிகளை படமாக்கிய விதமும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்., தனது வழக்கமான இசைப்பாணியில் இருந்து விலகி, கதையின் தன்மைக்கு ஏற்ற புதிய வடிவிலான பின்னணி இசையை வழங்கியிருக்கிறார். குறிப்பாக நீதிமன்றம் மற்றும் பதக்கத்தை சுற்றி உருவாகும் பரபரப்பான காட்சிகளில் பின்னணி இசை காட்சிகளின் தாக்கத்தை அதிகரிக்கிறது.
பதக்கம் மூலம் நாயகனுக்கு ஏற்படும் பிரச்சனை ஒரு பக்கம், அதன் பின்னணியில் நடக்கும் காவல்துறையின் நடவடிக்கைகள் மறுபக்கம் என கதை வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறது. அவை அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து, நீதிமன்ற வாதங்களுடன் சீராக நகர்த்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங். இதனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சட்டப்போராட்டத்தை மையமாக கொண்டிருந்தாலும், திரைக்கதை தொய்வடையாமல் நகர்கிறது.
பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சட்டப்போராட்டத்தின் மூலம் நீதி கிடைத்தாலும், அவர் மீது சுமத்தப்பட்ட பழி மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை எப்படி சரி செய்வது என்ற கேள்வியை இயக்குநர் சஜீவ் பழவூர் முன்வைத்திருக்கிறார். குறிப்பாக, அதற்காக அவர் கேட்கும் இழப்பீடு வழக்கமான பண இழப்பீட்டை தாண்டி இருப்பது படத்தின் முக்கியமான அம்சமாக இருக்கிறது. நடைமுறையில் அதை அரசு வழங்குவதற்கான சாத்தியம் குறைவாக இருந்தாலும், அந்த கோரிக்கையின் மூலம் மக்களையும், அரசு நிர்வாகத்தையும் ஒரு முக்கியமான விஷயத்தை சிந்திக்க வைத்திருக்கிறார்.
அதே சமயம், தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மீனவ கிராமங்களில் குடிசை வீடுகள் இல்லாத நிலையில், ஓலைத் தட்டிகளால் அமைக்கப்பட்டிருக்கும் கருணாஸின் வீடு மட்டும் சற்று செயற்கையாக தெரிகிறது. கதையின் இயல்புத்தன்மையை கருத்தில் கொண்டால், இந்த அம்சத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
சட்டப்போராட்டமும் நீதிமன்ற வாதங்களுமே படத்தின் பெரும்பாலான காட்சிகளாக இருந்தாலும், அவற்றை சுவாரஸ்யமாக கையாள்வதில் இயக்குநர் சஜீவ் பழவூர் வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு பதக்கத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு சாமானிய மனிதன் எதிர்கொள்ளும் சமூக மற்றும் சட்டப் பிரச்சனைகளை பேசியிருக்கும் ‘என்ன விலை’, அழுத்தமான கேள்விகளை எழுப்புவதோடு, தொய்வில்லாத திரைக்கதை மூலம் விறுவிறுப்பான திரைப்படமாகவும் கவனம் பெறுகிறது.