காமெடி கதைக்களத்துடன், ஒரே லொக்கேஷனை மையமாக வைத்து விறுவிறுப்பாக நகரும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘4 இடியட்ஸ்’. நான்கு திருடர்களின் ஆசையும், அவர்கள் எதிர்பாராத வகையில் சிக்கிக்கொள்ளும் மர்மங்களும், அதிலிருந்து தப்பிக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளும் தான் படத்தின் கதை. கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்திருந்தாலும், அவை முழுமையாக சிரிப்பை வரவழைக்கத் தவறியிருப்பது படத்தின் முக்கிய குறையாக அமைந்திருக்கிறது.
மருத்துவர் வின்சென்ட் அசோகனுக்குச் சொந்தமான கடற்கரை பங்களாவில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாக தகவல் வெளியாகிறது. இந்த தகவலை அறிந்துகொள்ளும் திருடர்களான புகழ், கும்கி அஷ்வின், திடியன் மற்றும் இந்திரன் ஆகிய நால்வரும் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். அதன்படி பங்களாவுக்குள் நுழைய முயற்சிக்கும் போது, அங்குள்ள காவலாளியான ரவி மரியாவிடம் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்காமல், ரவி மரியா அவர்களுடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்து கொள்கிறார். அதற்கு நான்கு பேரும் சம்மதிக்கிறார்கள்.
இதற்கிடையே, பங்களாவின் உரிமையாளரான மருத்துவர் வின்சென்ட் அசோகன் மற்றும் காவலாளி ரவி மரியா ஆகிய இருவரைப் பற்றியும் எதிர்பாராத ஒரு உண்மை நான்கு திருடர்களுக்கும் தெரிய வருகிறது. அதைக் கேட்டு அதிர்ச்சியடையும் அவர்கள், அந்த உண்மை தங்களுக்கு தெரிந்துவிட்டது என்பதை வெளிக்காட்டாமல் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களால் தப்பிக்க முடிந்ததா? பங்களாவின் உரிமையாளரும் காவலாளியும் மறைத்து வைத்திருக்கும் மர்மம் என்ன? என்பதற்கான பதில்களை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சிக்கிறது ‘4 இடியட்ஸ்’.
கதையின் நாயகன் என்ற முக்கியத்துவத்துடன் நடித்திருக்கும் புகழ், தனக்கென இருக்கும் நகைச்சுவை பாணியை இந்தப் படத்திலும் சரியாக வெளிப்படுத்தத் தவறியிருக்கிறார். அவரது காமெடி காட்சிகள் பெரும்பாலான இடங்களில் எதிர்பார்த்த அளவுக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை. சின்னத்திரையில் எளிதாக கைகூடும் சில விஷயங்கள், சினிமாவில் அதே அளவுக்கு பலன் தராது. திரைப்படத்தில் கதாபாத்திரங்களின் நடிப்பு, வசன உச்சரிப்பு மற்றும் காமெடி டைமிங் ஆகியவை ஒன்றாக இணைந்தால்தான் நகைச்சுவை காட்சிகள் ரசிக்க வைக்கும். அந்த வகையில் புகழின் நடிப்பிலும், காமெடி டைமிங்கிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
புகழுடன் இணைந்து நடித்திருக்கும் கும்கி அஷ்வின், திடியன் மற்றும் இந்திரன் ஆகியோருக்கும் பெரிய அளவில் காமெடி கைகொடுக்கவில்லை. நான்கு பேரின் கூட்டணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காட்சிகளில் எதிர்பார்த்த நகைச்சுவை தாக்கம் குறைவாகவே இருக்கிறது. அவர்களுடன் இணைந்து ரவி மரியாவும் காமெடி என்ற பெயரில் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்திருப்பது காட்சிகளின் சுவாரஸ்யத்தை குறைக்கிறது. அதேசமயம், வின்சென்ட் அசோகன் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை குறையின்றி வழங்கியிருக்கிறார்.
பிரக்யா நயனை படத்தில் வித்தியாசமான முறையில் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது கதாபாத்திரத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட சில காட்சிகள் படத்தின் கமர்ஷியல் தன்மைக்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக, கவர்ச்சி பாடல் ஒன்றின் மூலம் பார்வையாளர்களை கவரும் முயற்சியும் இடம்பெற்றிருக்கிறது.
யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு வண்ணமயமான தோற்றத்தை கொடுத்திருக்கிறது. ஒரே லொக்கேஷனை மையமாக வைத்து கதை நகர்ந்தாலும், காட்சிகளை சுவாரஸ்யமாகவும் கண்ணுக்கு விருந்தாகவும் பதிவு செய்திருக்கிறார். படத்தின் கமர்ஷியல் அம்சங்களை அழகாக காட்சிப்படுத்தியிருப்பது ஒளிப்பதிவின் பலமாக இருக்கிறது.
சுபாஷ் முனிரத்னத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் கமர்ஷியல் தன்மைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கின்றன. குறிப்பாக, கதையின் வேகத்துக்கு ஏற்ப பின்னணி இசையை பயன்படுத்தியிருக்கும் விதம் கவனிக்க வைக்கிறது.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் சஜோ சுந்தர் முருகேசன், குறிப்பிட்ட ஒரு லொக்கேஷனுக்குள் முழு கதையையும் நகர்த்தியிருக்கும் விதத்தில் கவனம் செலுத்தியிருக்கிறார். அதேபோல், பிரக்யா நயனின் கதாபாத்திரத்தை வெவ்வேறு சூழல்களில் பயன்படுத்தியிருப்பதும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், காமெடியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதன்மை கதாபாத்திரங்களிடம் இருந்து அதிகப்படியான நடிப்பை பெற்றிருப்பது சில காட்சிகளை செயற்கையாகவும், சோர்வாகவும் மாற்றுகிறது.
கமர்ஷியல் மற்றும் காமெடி திரைப்படங்களை ரசிக்கும் ரசிகர்களை கவரக்கூடிய பல அம்சங்கள் ‘4 இடியட்ஸ்’ படத்தில் இருக்கின்றன. ஆனால், அந்த அம்சங்களை கதையோடு இயல்பாக பயணிக்க வைத்து, காமெடி டைமிங்கிலும் நடிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், படம் மிகப்பெரிய காமெடி சரவெடியாக அமைந்திருக்கும்.