போட்டோகிராபர் – விமர்சனம்

புகைப்படக் கலைஞரின் தனிமையான சாகசப் பயணத்தை மையமாக வைத்து, மர்மம், திகில் மற்றும் உளவியல் உணர்வுகளை இணைத்து உருவாக்கப்பட்ட படம்தான் ‘போட்டோகிராபர்’. கதை எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கும் அஷ்ரப், முதல் படத்திலேயே ஒரு தைரியமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த முயற்சி முழுமையாக வெற்றிபெற்றதா என்பதைப் பார்க்கும்போது, படம் சில இடங்களில் ஈர்க்கிற அதேநேரம் சில இடங்களில் சோர்வூட்டுகிறது.

புகைப்படக் கலைஞர் அஷ்ரப், இதுவரை யாரும் படம் பிடிக்காத அரிய மரத்தைத் தேடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பயணிக்கிறார். வழிதவறி ஆபத்தான காட்டுக்குள் சிக்கிக் கொள்கிறார். சென்றவர்கள் திரும்பி வராத அந்த ஆபத்தான வனப்பகுதியில் இருந்து வெளியேற வழியறியாமல் தவிக்கும் அவர், பல ஆபத்தான சூழல்களை எதிர்கொண்டு உயிருக்காகப் போராடுகிறார். ஒவ்வொரு நிமிடமும் மர்மமும் திகிலும் நிறைந்த அனுபவங்களைச் சந்திக்கும் அஷ்ரப், அங்கிருந்து தப்பினாரா? அவர் தேடிய மரத்தைப் பார்த்தாரா? என்பதைத் திகில் மற்றும் உளவியல் கலந்த நடையில் சொல்வதே இந்தப் படம்.

தனிமனிதப் பயணத்தைக் கதைக்களமாக வைத்து, மர்மம், திகில், அமானுஷ்யம், உளவியல் ஆகியவற்றைக் கலந்து படத்தை உருவாக்க முயன்றிருக்கிறார் அஷ்ரப். வீரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் முழுப் படத்தையும் தன் தோள்களில் சுமந்து நடித்திருக்கும் அவர், முதல் படத்திலேயே பல்வேறு உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். ஆரம்பத்தில் அவரது நடிப்பு சற்று அதிகப்படியாகத் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் கதை மற்றும் காட்சிகளின் ஆழத்தால் அது பாராட்டைப் பெறுகிறது.

நாயகியாக அனனி சுவாமிநாதன் சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், நிறைவாக நடித்திருக்கிறார். நண்பராக வரும் கருணாகரன் தனது எதார்த்தமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்க்கிறார். மற்றொரு நண்பராக உறியடி சிவாவும் நன்றாகப் பொருந்தியிருக்கிறார். தந்தையாக ஆடுகளம் நரேன் அனுபவமிக்க நடிப்பை வழங்கியிருக்கிறார். அம்மாவாக தேவி மகேஷ் அழகாகவும் அளவாகவும் நடித்து கவர்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரயீஷ் அஹ்மத் காட்டின் அமைதியையும் ஆபத்தையும் பார்வையாளர்கள் அஞ்சும் வகையில் காட்ட முயன்றிருக்கிறார். ஆனால் பெரும்பாலான காட்சிகள் பகல் நேரத்தில் நடப்பதாலும், மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக இல்லாத இடங்களில் பயணிப்பதாலும் எதிர்பார்த்த அச்சத்தை உருவாக்க முடியவில்லை. கிராபிக்ஸ் மூலம் மிரட்ட முயன்ற முயற்சிகளும் பெரும்பாலும் தோல்வியடைந்திருக்கின்றன.

ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசையும் வித்தியாசமான ஒலிகளும் கவனத்தை ஈர்க்கின்றன. நாயகன் மட்டும் பயணிக்கும் இரண்டாம் பாதியில், பின்னணி இசை பார்வையாளர்களின் கவனத்தை இறுகப் பிடித்து வைக்கிறது.

படத்தொகுப்பாளர் ஆர்.சி. பிரணவ் இயக்குநருக்குப் பெரும் துணையாக இருந்தாலும், முதல் பாதியை மிக மெதுவாக நகர்த்தியிருப்பது பார்வையாளர்களை சோர்வடையச் செய்கிறது. இருந்தாலும் இரண்டாம் பாதியில் கதையை வேகமாக முன்னெடுத்து, சில எதிர்பாராத திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களை மீண்டும் படத்துடன் இணைத்து விடுகிறார்.

ஒரு புகைப்படக் கலைஞரின் பயணத்தை மையமாக வைத்து, உயிர் பிழைக்கும் தனிமனிதப் போராட்டத்தையும் சாகசத்தையும் காட்சி மொழியில் சொல்ல முயன்றிருக்கும் திரைக்கதை, துவக்கத்திலிருந்தே மெதுவாக நகர்கிறது. கதைக்குள் நுழையத் தடுமாறுவதும், நேரத்தைக் கழிக்கும் காட்சிகள் திணிக்கப்பட்டதாகத் தோன்றுவதும் முதல் பாதியை சோர்வாக்குகிறது. இரண்டாம் பாதியில் கதை உயிர்பெறுகிறது. இயற்கை, அம்மா-மகன் உணர்வு, அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்பு ஆகியவை சுவாரஸ்யத்தைக் கொண்டு வருகின்றன.

Read Previous

வதந்தி – சீசன் 2 – விமர்சனம்

Read Next

ஜிடிஎன் – விமர்சனம்