ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதும் தொடங்கும் விசாரணை, பல அடுக்கு மர்மங்களை வெளிக்கொணர்ந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது ‘வதந்தி’ சீசன் 2. முதல் சீசனின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இந்தத் தொடரை மேலும் முதிர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார். இரத்தக் காட்சிகள், அசிங்கமான காட்சிகள் இல்லாமல், குடும்பம் முழுவதும் பார்க்கக்கூடிய அமைதியான கிரைம் திரில்லராக இதை வடிவமைத்திருப்பது இந்தப் பருவத்தின் முக்கிய அம்சம்.
மதுரை மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிக்காக பள்ளம் தோண்டும்போது ஒரு எலும்புக்கூடு கிடைக்கிறது. ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் பொறுப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமாருக்கு வழங்கப்படுகிறது. எந்த ஆதாரமும் இல்லாமல், சிதைந்த நிலையில் உள்ள அந்த எலும்புக்கூட்டை மட்டும் வைத்து விசாரணையைத் தொடங்கும் அவர், அதே இடத்தில் மேலும் ஒரு எலும்புக்கூட்டை கண்டுபிடிக்கிறார். இரண்டும் பெண்களுடையவை என்பதும், அவர்கள் கொலை செய்யப்பட்டவர்கள் என்பதும் தெரியவருகிறது.
எலும்புக்கூடுகள் தொடர்பான ஆரம்ப விசாரணை முடிந்த பிறகும், சசிகுமார் திருப்தியடையவில்லை. உண்மையான குற்றவாளி யார்? கொலைக்கான காரணம் என்ன? என்ற கேள்விகளுடன் அவர் ஆழமாக விசாரணையில் இறங்குகிறார். அவரது புலனாய்வு மூலம் பல புதிய மர்மங்கள் வெளிவருகின்றன. அந்த முடிச்சுகளை அவிழ்த்து உண்மையான கொலையாளியை அடையாளம் காண்பதும், அதற்கான காரணத்தை வெளிப்படுத்துவதுமே இந்தப் பருவத்தின் மையம்.
கிரைம் திரில்லர் தொடர்களில் வழக்கமாக பல கிளைக்கதைகள் இருக்கும். அதே பாணியில் சென்றாலும், கொலையாளி யார் என்ற யூகங்களை முறியடிக்கும் வகையிலும், கொலைக்கான காரணத்தை எதிர்பாராத திசையில் திருப்பும் வகையிலும் ஆண்ட்ரூ லூயிஸ் திரைக்கதையை அமைத்திருக்கிறார். முதல் அத்தியாயத்திலேயே பார்வையாளர்களை ஈர்க்கும் அவர், எலும்புக்கூடு விசாரணையை சுவாரஸ்யமாக நகர்த்தி, பின்னர் கொலையாளி மற்றும் காரணத்தை மையப்படுத்தி கதையை முன்னெடுக்கிறார். இதன் மூலம் காதல், கணவன்-மனைவி உறவு, மதுரை இளைஞர்களின் ஜல்லிக்கட்டு ஆர்வம் போன்றவற்றுடன் உலகளாவிய ஒரு சமூகப் பிரச்சினையையும் நேர்த்தியாக இணைத்திருப்பது தொடரின் சிறப்பம்சம்.
நாயகனாக மூசா ராசா என்ற சப்-இன்ஸ்பெக்டர் வேடத்தில் தோன்றும் சசிகுமார், காக்கி உடையில் முதன்முறையாக தோன்றினாலும், தனது இயல்பான நடிப்பையே தொடர்கிறார். ‘சுப்பிரமணியபுரம்’ முதல் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வரை பார்த்த அதே சசிகுமார்தான் இங்கும் இருக்கிறார். உடல் அசைவுகளைக் குறைத்து, அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
மதுரை மாவட்ட எஸ்.பி. வேடத்தில் அனகா சிறப்பாகப் பொருந்தியிருக்கிறார். காவல்துறை உயர் அதிகாரி பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார். முடக்கத்தான் மணி கதாபாத்திரத்தில் அறிமுக நடிகர் யஷ்வந்த் மதுரை இளைஞராக மிளிர்கிறார். மாடு பிடிக்கும் ஆர்வம், நண்பர்களிடம் பேசும் விதம், காதல் காட்சிகள் என ஒவ்வொரு அசைவிலும் கவனத்தை ஈர்க்கிறார்.
‘டாடா’ படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோன்றும் அபர்ணா தாஸ், சசிகுமாரின் மனைவியாக சாதாரண பாத்திரத்தில் தோன்றுகிறார். கதையில் அவருக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. முடக்கத்தான் மணியின் காதலியாக ரேவதி மற்றும் முதல் சீசனின் ராமர் வேடத்தில் தொடரும் விவேக் பிரசன்னாவும் தங்கள் பங்கை நன்றாகச் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி இருளை அதிகமாகப் பயன்படுத்தாமல், இயற்கை வெளிச்சத்தில் ரம்மியமான காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் சைமன் கே. கிங்கின் பின்னணி இசை தொடருக்கு பெரிய பலம் சேர்க்கிறது. மீண்டும் மீண்டும் கேட்டாலும் சலிக்காத மெல்லிசை, மர்மக் காட்சிகளிலும் அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறது.
படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ ஒவ்வொரு அத்தியாயத்திலும் சஸ்பென்ஸைப் பராமரித்து, மதுரை மக்களின் வாழ்வியலையும் இணைத்துத் தொகுத்திருக்கிறார். கலை இயக்குநர் மீவின் ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் பழைய காவல் நிலையங்களை உண்மைக்கு நெருக்கமாக வடிவமைத்திருக்கிறார்.
முதல் சீசனில் கொலையாளியைத் தேடும் பயணத்தை விறுவிறுப்பாக நகர்த்திய ஆண்ட்ரூ லூயிஸ், இந்தப் பருவத்தில் தண்டனை பெற்றவரை நிரபராதி என நிரூபிக்கும் பயணத்தை அதே வேகத்தில் கொண்டு செல்கிறார். ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்தது என்ன? கொலையாளி யார்? என்ற கேள்விகளை எழுப்புகிறது. முடக்கத்தான் மணியின் மௌனமும் சிந்திக்கத் தூண்டுகிறது.
இரத்தக் காட்சிகள், ஆபாசம், கொடூரமான காட்சிகள் இல்லாமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கக்கூடிய அமைதியான ஆனால் சுவாரஸ்யமான கிரைம் திரில்லராக இதை உருவாக்கிய ஆண்ட்ரூ லூயிஸை பாராட்ட வேண்டும்.