நாயகியாக சாக்ஷி அகர்வால் தனது பாத்திரத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். காதல், பயம், அதிர்ச்சி என அனைத்து உணர்வுகளையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
காதலராக வரும் விஜய் விஸ்வா, ஆரம்பத்தில் ஹீரோ போல எண்ட்ரி கொடுத்தாலும், பின்னர் கதை மாற்றத்தில் அவரது நிலைமை இரக்கத்தைத் தூண்டுகிறது. அந்தப் பாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்.
படத்தின் உண்மையான ஹைலைட், இயக்குநரும் நடிகருமான செல்லகுட்டி! கோமாளி உடை, தோற்றத்தில் அறிமுகமாகி, பின்னர் விஸ்வரூபம் எடுத்து திரையரங்கை அதிர வைக்கிறார். ஹீரோ, ஹீரோயின், வில்லன் என அனைத்து இடங்களையும் தனது அதிரடி நடிப்பால் ஆக்கிரமித்துவிடுகிறார். குறிப்பாக, கோபத்தை வெளிப்படுத்தும் அவரது சத்தமான மேனரிசம் – சோசியல் மீடியாவில் டிரெண்ட் ஆகும் அளவுக்கு அசத்தல். தற்போதைய ‘நடிப்பு அரக்கர்களை’ கூட மிஞ்சும் வகையில், ஒன்-மேன் ஆர்மியாக ஜொலிக்கிறார்.
யோகி பாபுவின் காட்சிகள் சிரிப்பு வெடி! வழக்கமான உடல் கேலி வசனங்கள் இருந்தாலும், சில இடங்களில் உண்மையிலேயே வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறார். ரோபோ சங்கர், தங்கதுரை போன்றோரின் காமெடி டிராக், படத்திற்கு கூடுதல் உயிர் கொடுக்கிறது – அவர்களின் வசனங்கள் நகைச்சுவைக்கு உத்தரவாதம்.
அம்மா வேடத்தில் அம்பிகா, வில்லன் ரோலில் ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வா – இருவரும் தங்கள் பாத்திரங்களை திறம்பட நிறைவேற்றியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பொருந்தியிருக்கின்றன. திரில்லர் காட்சிகளில் இசை பதற்றத்தை அதிகரிக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஜெ. லக்ஷ்மன் குமார், கதையின் உணர்ச்சிகளை அழகாகப் படம்பிடித்திருக்கிறார். இருண்ட காட்சிகள், அதிரடி சீக்வென்ஸ்கள் என அனைத்தும் கச்சிதம்.
படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம், திருப்பங்களை சிதைக்காமல் காட்சிகளை இணைத்திருக்கிறார் – படத்தின் வேகத்தை சீராக வைத்திருக்கிறார்.
எழுத்து மற்றும் இயக்கத்தில் செல்லகுட்டி, சஸ்பென்ஸ் திரில்லரை நட்பு, காதல் உணர்வுகளுடன் கமர்ஷியல் டச்சுடன் சொல்லியிருக்கிறார். இயக்குநராக சில இடங்களில் தடுமாற்றம் இருந்தாலும், நடிகராக அவர் காட்டியிருக்கும் ஆக்ரோஷம் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறது. பவர் ஸ்டார், நடிப்பு அரக்கன் போன்ற கோமாளித்தனங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு செல்லகுட்டியின் பெர்பார்மன்ஸ், நடிகராக நிச்சயம் ஒரு வரவேற்பைப் பெற்றுத் தரும்.