இளையராஜாவின் இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா, முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த மத மாற்றம் சில மாதங்களுக்கு முன்பே நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்பந்தமாக கோடம்பாக்கத்தில் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன. யுவன்ஷங்கர் ராஜாவைப் பொறுத்தவரையில் அவரது இரண்டு திருமண வாழ்க்கையுமே அவருக்கு நிம்மதித் தராமல் போயிருக்கிறது. மேலும், அம்மாவின் இழப்பும் அவரை நிறையவே தடுமாற வைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் யுவனுக்கு நெருக்கமான முஸ்லிம் மத்தைச் சார்ந்த ஒரு இயக்குனர் அவருக்கு முஸ்லிம் மகான் எழுதிய புத்தகம் ஒன்றைக் கொடுத்து படிக்கச் சொல்லியிருக்கிறார். அந்த புத்தகத்தைப் படித்ததும் யுவனுக்கு ஒரு தெளிவு கிடைத்ததாகவும், அதனால் அவர் முஸ்லிம் மதத்தைத் தழுவ விருப்பப்பட்டதாகவும் தெரிகிறது. அதைத் தொடர்ந்து அந்த இயக்குனரின் ஏற்பாட்டின்படி, பாண்டிச்சேரியில் உள்ள முஸ்லிம் மத குரு ஒருவரிடம் யுவன்ஷங்கர் ராஜா ஆசி பெற்று அந்த மதத்தைத் தழுவியதாக கூறப்படுகிறது . ஆனால், அதை இத்தனை நாட்களாக வெளியில் சொல்லாமலே இருந்திருக்கிறார். ஒரு சில இணையதளங்களில் இது பற்றிய செய்திகள் வெளியாகின. ஒரு இணையதளத்தில் சில நாட்களுக்கு முன் யுவன் , மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அவற்றிக்கு மறுப்பு அளிக்கும் விதமாக யுவன்ஷங்கர் ராஜா, ட்விட்டர் வலைதளத்தில் இன்று ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். “நான் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்த செய்தி ஒரு பொய்ச் செய்தி. ஆனால், நான் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன். என் குடும்பத்தார் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள், இது சம்பந்தமாக எனக்கும் என் தந்தைக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை” என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே யுவனின் மத மாற்றம் பற்றி சில கருத்துக்களும் கோடம்பாக்கத்தில் உலவி வருகின்றன. தமிழில் பல படங்களுக்கு இசையமைத்தாலும் யுவனுக்கு இன்னும் ஹிந்தித் திரையுலகிலும், சர்வதேச அளவிலும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஏ.ஆர். ரகுமான் , முஸ்லிம் மதத்தைத் தழுவிய பின்னர்தான் இசையமைப்பாளராகவும் ஆனால், தற்போது ஆஸ்கர் விருதுகளைப் பெற்று உலக அளவிலும் புகழ் பெற்றவராக இருக்கிறார். அதனால்தான் யுவனும், மதம் மாறியிருக்கிறாரோ என்ற சந்தேகத்தையும் வெளியிடுகிறார்கள். அதே சமயம், இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றும் அப்பா இளையராஜாவுடனும் இதனால் அவருக்கு மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. மகனின் இந்த மத மாற்றத்தை இளையராஜா ஏற்கவில்லை என்றும், அவர் மனமுடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. யுவன்ஷங்கர் ராஜா என்ற பெயரை அவர் அப்படியே பயன்படுத்துவாரா அல்லது முஸ்லிம் பெயரை வைத்துக் கொள்வாரா என்பது பற்றி இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.